மளிகை கடையில் 3-வது முறையாக திருட்டு
- மளிகை கடையில் 3-வது முறையாக திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளது.
- தற்போது 3-வது முறையாக திருடப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் புறநகர் பகுதியான துறைமங்கலம் அவ்வையார் தெருவை சேர்ந்தவர் வைத்தியலிங்கம் (வயது 41). இவர் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் துறைமங்கலம் பிரிவு சாலை 3 ரோடு அருகே மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். வைத்தியலிங்கம் இரவு வழக்கம்போல் வியாபாரத்தை முடித்து விட்டு கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். அதிகாலை அவரது கடை அருகே மளிகை கடை வைத்திருக்கும் மணி என்பவர் தனது கடையை திறக்க வரும் போது, வைத்தியலிங்கத்தின் கடையின் கதவு (ஷட்டர்) பாதியளவு திறந்திருந்த நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதையடுத்து அவர் இதுகுறித்து உடனடியாக வைத்தியலிங்கத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் அவர் விரைந்து வந்து மளிகை கடைக்குள் சென்று பார்த்த போது உள்ளே இருந்த ரூ.10 ஆயிரம் மதிப்பிலான சிகரெட் பாக்கெட்டுகள், ரூ.ஆயிரம் மதிப்பிலான கைக்கடிகாரங்கள், ரூ.500 மதிப்பிலான குளிர்பானங்கள், ரூ.500 மதிப்பிலான சோப்புகள் மற்றும் கல்லாவில் வைத்திருந்த 800 ரூபாய் திருட்டு போயிருந்தது.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். ஏற்கனவே மேற்கண்ட மளிகை கடையில் 2 முறை திருட்டு நடந்துள்ளது என்றும், தற்போது 3-வது முறையாக திருடப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.