பெரம்பலூர் - துறையூர் இருவழிச் சாலை திறப்பு
- பெரம்பலூர் - துறையூர் இருவழிச் சாலை திறக்கப்பட்டது
- நடைபெற்ற அரசு விழாவில்
பெரம்பலூர்:
பெரம்பலூர் முதல் துறையூர் வரையிலான 30 கிலோ மீட்டர் இருவழித்தட சாலை திறக்கப்பட்டதையடுத்து மக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டது.
நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின் சார்பாக சென்னை கன்னியாகுமரி தொழிற்தட திட்டத்தின் மூலம் பெரம்பலூர் முதல் துறையூர் வரையிலான 30 கி.மீ நீளமுள்ள சாலையை ரூ.2.09 கோடியில் நிலம் எடுத்து இருவழித்தடமாக அகலப்படுத்தி மேம்பாடு செய்து, நக்கசேலம், குரும்பலூர் நகரப்பகுதிகளுக்கு மாற்றாக புறவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையில் 12 சிறுபாலங்கள், 53 குறுபாலங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த சாலை வழிகளில் முக்கிய சந்திப்புகளில் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் சோலார் பிளிங்கா விளக்குகள், உயர்மின்கோபுர விளக்குகளும், குடியிருப்புப் பகுதிகளில் நடைபாதையுடன் கூடிய மழைநீர் வடிகால் வசதியும், சாலையோர மின்விளக்குகளும், கழிவறை, தண்ணீர் மற்றும் விளக்கு வசதிகளுடன் கூடிய பஸ் நிழற்குடைகளும் கட்டப்பட்டுள்ளன.
அரியலூரில் நேற்று நடந்த அரசு விழாவில் இந்த சாலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இதையடுத்து ஆலம்பாடியில் அச்சாலையின் பெயர் பலகையை திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது. பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.