பெரம்பலூர் மாவட்ட போலீசாருக்கு மலையேறும் பயிற்சி
- பெரம்பலூர் மாவட்ட போலீசாருக்கு மலையேறும் பயிற்சி அளிக்கபட்டது
- கலெக்டர் கற்பகம் தொடங்கி வைத்தார்
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் பணிபுரியும் காவல்துறையினருக்கு பணிகளுக்கு இடையில் அவர்களது உடலுக்கும் மனதிற்கு உற்சாகம் அளிக்கும் வகையில் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் ஷ்யாம்ளா தேவி மேற்கொண்டு வருகின்றார். அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் பணிபுரியும் காவல்துறையினருக்கு மலையேற்ற பயிற்சி பெரம்பலூர் அருகே எளம்பலூர் கிராமத்தில் உள்ள பிரம்மரிஷி மலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் ஷ்யாம்ளா தேவி தலைமையில் நடைப்பெற்றது.
இந்த பயிற்சியில் சிறப்பு விருந்தினராக மாவட்ட கலெக்டர் கற்பகம் கலந்து கொண்டு மாவட்ட காவல்துறையினரோடு இணைந்து மலையேற்ற பயிற்சியில் ஈடுபட்டார்கள். பயிற்சியில் பெரம்பலூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்ட் மதியழகன் (தலைமையிடம்), பெரம்பலூர் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் பழனிச்சாமி (பயிற்சி), துணைக் காவல் கண்காணிப்பாளர் மதுமதி, காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் மற்றும் ஊர்க்காவல்படையினர் என சுமார் 200 பேர் கலந்து கொண்டனர்.
பின்னர் மலை அடிவாரத்தில் உள்ள கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர். அதனை தொடர்ந்து அன்னை சித்தர் ராஜகுமார் குருஜியின் சமாதிக்கு சென்றனர். அப்போது மாதாஜி ரோகிணி ராஜகுமார், தவயோகி தவசிநாதன் ஆகியோர் உடன் சென்றனர். இந்நிகழ்ச்சியின் போது மகா சித்தர்கள் அறக்கட்டளையின் சார்பாக அனைவருக்கும் தேநீர் மற்றும் வேற்கடலை, சுண்டல் பிரசாதம் வழங்கப்பட்டது.