ராமகிருஷ்ணா கல்வி குழுமத்தில் 'ஞானோத்சவ்-23' விழா
- மாணவர்களுக்கான எதிர்காலம் குறித்து சிறப்பு விருந்தினர் பேசினார்
- ராமகிருஷ்ணா கல்வி குழுமத்தில் 'ஞானோத்சவ்-23' விழா நடைபெற்றது
பெரம்பலூர்:
பெரம்பலூர் ஸ்ரீராமகிருஷ்ணா கல்வி நிறுவனம் சார்பில் 'ஞானோத்சவ்-23' மற்றும் கலைத்திருவிழா ஸ்ரீ சாரதா மகளிர் கலைக்கல்லூரியில் நடந்தது. விழாவிற்கு ஸ்ரீராமகிருஷ்ணா கல்வி நிறுவன தலைவர் சிவசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். செயலாளர் விவேகானந்தன், ஸ்ரீசாரதா மகளிர் கலை கல்லூரி முதல்வர் சுபலெட்சுமி, ஸ்ரீராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முதல்வர் மாரிமுத்து, ஸ்ரீராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் பிரபாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகரும், எழுத்தாளருமான ஈரோடு மகேஷ் கலந்துகொண்டு பேசுகையில், அறிவு என்பது வேறு, ஞானம் என்பது வேறு. அறிவு என்பது நீங்கள் முன்னேற பயன்படுவது, ஞானம் என்பது நீங்கள் பெற்ற அறிவின் மூலம் சமுதாயத்திற்குப் பயன்படுவதாகும். மாணவர்கள் தங்களுக்கான எதிர்காலத்தைத் தாங்களே உருவாக்கிக் கொள்ள வேண்டும். எண்ணங்களை எப்பொழுதும் தங்களின் தோள்களில் சுமக்க வேண்டும், தோல்வியைக் கண்டு துவண்டு போகாமல் அதனை ரசனையுடன் ஏற்றுக்கொண்டு செயல்பட்டால் வெற்றி நிச்சயம் கிடைக்கும்.
மாணவர்கள் எப்பொழுதும் மன உறுதியுடனும், தைரியத்துடனும் தான் மேற்கொண்ட இலக்கை அடைய வேண்டும். மாணவ, மாணவிகள் குடும்பச் சூழ்நிலைக்கேற்றவாறு பயணிக்க வேண்டும் என தெரிவித்தார்.இதில் துணை முதல்வர்கள், துறைதலைவர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் ஆங்கில துறை தலைவர் ராமேஸ்வரி நன்றி கூறினார்.