தி.மு.க. பேரூராட்சி தலைவரை திட்டிய 3 பேர் மீது வழக்கு
- தி.மு.க. பேரூராட்சி தலைவரை திட்டிய 3 பேர் மீது வழக்கு பதியபட்டுள்ளது
- மேலும் போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
அரும்பாவூர்,
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகாவில் உள்ள பூலாம்பாடி பேரூராட்சி தலைவராக இருப்பவர் தி.மு.க.வைச் சேர்ந்த பாக்யலட்சுமி (வயது 40). இவர் பட்டியலினத்தை சேர்ந்தவர் ஆவார். பாக்யலட்சுமியின் கணவர் செங்குட்டுவன் தி.மு.க. மாவட்ட பிரதிநிதியாக உள்ளார். இந்த நிலையில் கடம்பூரை சேர்ந்த இரண்டு பேர் மற்றும் தேனூரை சேர்ந்த ஒருவர் என மூன்று பேர் பேரூராட்சி தலைவர் பாக்யலட்சுமி வீட்டிற்கே சென்று வீட்டுமனைப்பிரிவிற்கு அனுமதி வழங்க கோரி தகராறில்ஈடுபட்டதாகவும், அப்போது சாதியை சொல்லி திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் பாக்யலட்சுமி அரும்பாவூர் போலீசில் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் அரும்பாவூர் போலிசார் விசாரணை செய்தனர். புகாரில் முகாந்திரம் இருப்பதை அறிந்த அரும்பாவூர் போலீசார் கடம்பூரை சேர்ந்த ராமதாஸ் மகன் சதீஸ்குமார், சின்னசாமி மகன் ரெங்கநாதன் மற்றும் தேனூர் கந்தன் மகன் கிருஷ்ணண் ஆகிய மூன்று பேர் மீதும் வன்கொடுமை சட்டத்தில் வழக்குபதிவு செய்துள்ளனர். மேலும் போலீசார் தொடர்விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். ஆளுங்கட்சி பேரூராட்சி தலைவர் வீட்டிற்கே சென்று சாதியை சொல்லி திட்டியும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் கூறப்படும் சம்பவம் பூலாம்பாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.