ெபரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்-கலெக்டர் கற்பகம் வழங்கினார்
- ெபரம்பலூர் மாவட்ட கலெக்டர் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்
- கூட்டத்தில் 222 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது
பெரம்பலூர்:
பெரம்பலூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கற்பகம் தலைமையில் நடந்தது. இதில் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, தொழில் தொடங்க கடன் உதவி, வீட்டுமனைப்பட்டா, விதவை உதவித்தொகை, ஆதரவற்ற விவசாயக் கூலி உதவித்தொகை, பட்டா மாறுதல், கல்விக் கடன் கோருதல், இலவச தையல் இயந்திரம் கோருதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 222 பேர் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
பின்னர் அம்மனுக்களை சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களிடம் அளித்து மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுத்து அதற்கான அறிக்கையினை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டார். மேலும் பொதுமக்கள் வழங்கிய மனுக்களில் ஒரு மாதத்திற்கும் மேலாக நடவடிக்கை எடுக்கப்படாத மனுக்கள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனும் கலெக்டர் விரிவாக ஆய்வு நடத்தினார். பின்னர் கலெக்டர் பேசுகையில், அரசு அலுவலர்களிடம் மனு அளித்தால் தங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்ற உணர்வுடன், நியாயமான எதிர்பார்ப்புடன் மனு வழங்கும் பொதுமக்களின் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் அரசுத்துறை அலுவலர்கள் பணியாற்ற வேண்டும்.
பொதுமக்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பை அரசுத்துறை அலுவலர்கள் பெற்றுள்ளோம். இந்த வாய்ப்பினை முறையாக பயன்படுத்தி, பொது மக்களுக்கு சேவை செய்யும் மனப்பான்மையுடன் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும். பொதுமக்களின் மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டும் என தெரிவித்தார். தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் மூன்று சக்கர சைக்கிள், தையல் இயந்திரம், காது கேட்கும் கருவி என 4 பயனாளிகளுக்கு ரூ.31 ஆயிரத்து 400 மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். கூட்டத்தில் டி.ஆர்.ஓ. அங்கயற்கண்ணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லலிதா, ஆர்.டி.ஓ நிறைமதி, மாற்றுத்திறனாளி நல அலுவலர் பொம்மி உள்ளிட்ட அனைத்து துறைகளின் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.