செட்டிக்குளம் செல்லியம்மன் கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை
- செட்டிக்குளம் செல்லியம்மன் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடினர்
- 2 பித்தளை மணிகளையும் திருடிச்சென்றனர்
குன்னம்,
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் பகுதியில் உள்ள செட்டிக்குளம் கிராமத்தில் செல்லியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்திரை மாத முயல்வேட்டை திருவிழா பிரசித்தம். இந்நிலையில் இரு தரப்பினர் பிரச்சினையால் இந்த கோயில் கடந்த 3 வருடங்களாக எந்தவித பூஜைகளும் நடைபெறவில்லை. முயல்வேட்டை திருவிழா மட்டுமே நடைபெற்று உள்ளது.இதன் காரணமாக அனைத்து கதவுகளும் எப்போதும் பூட்டி இருக்கும். ஆனால் கோவிலின் பிரதான வாயில் மட்டும் திறந்து இருக்கும்.
இந்நிலையில் இந்த கோவிலில் வைக்கப்பட்டுள்ள உண்டியல் உடைக்கப்பட்டிப்பதை கண்டு அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.இது குறித்து பாடாலூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். போலீசார் அங்கு வந்து நடத்திய விசாரணையில், உண்டியல் பூட்டை உடைக்க முயன்று முடியாததால், கடப்பாறையால் உண்டியலின் பக்கவாட்டில் உள்ள மூடியை பிளந்து, ஒரு குச்சியை பயன்படுத்தி, பணத்தை லாவகமாக திருடிச் சென்றுள்ளது தெரிய வந்தது.
கோவில் உண்டியலில் சுமார் 40 ஆயிரம் பணம் இருந்திருக்கலாம் என்று அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.மேலும் கோவிலில் இருந்த பழமையான இரண்டு பித்தளை மணிகளையும் மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்துள்ளது. இது குறித்து கோவில் தர்மகர்த்தா சக்திவேல், மூடப்பாடி சுதந்திரம் ஆகியோர் அளித்த புகாரின் பேரில், பாடாலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.