4-ம் ஆண்டு தொடக்க விழாவில் பங்கேற்கிறார்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 5-ந்தேதி தென்காசி வருகை- 20 ஆயிரம் பேர் அமரும் வகையில் பிரமாண்ட மேடை தயாராகிறது
- முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தென்காசி வருகை தர உள்ளதால் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
- நிகழ்ச்சியில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது.
தென்காசி:
தென்காசி மாவட்டம் உதயமாகி 3 ஆண்டுகள் நிறைவடைந்து 4-ம் ஆண்டு தொடங்க உள்ளது. இதனையொட்டி வருகிற 5-ந்தேதி நடைபெற உள்ள நிகழ்ச்சியில் அரசின் சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட உள்ளது.
இதில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ளார். அவர் தென்காசி மாவட்டத்திற்கு வருகை தர உள்ளதால் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இதனையொட்டி நிகழ்ச்சி நடத்துவதற்கு தென்காசி குத்துக்கல்வலசையில் இருந்து கணக்கப்பிள்ளை வலசை செல்லும் சாலையில் அமைந்துள்ள தனியார் மேல்நிலைப்பள்ளி வளாகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
அந்த இடத்தை தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் நேற்று பார்வையிட்டார். அங்கு சுமார் 20 ஆயிரம் பேர் அமரும் வகையில் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது.
தொடர்ந்து இன்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மற்றும் மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் ஆகியோர் விழா நடைபெறும் இடத்தை ஆய்வு செய்ய உள்ளனர்.