முன்விரோத தகராறில் முதியவர் குத்திக் கொலை
- படுகாயம் அடைந்த அண்ணாதுரை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
- போலீசார் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர் .
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா மணியனூர் அருகே உள்ள கோலாரம் தேவேந்திர தெரு பகுதியை சேர்ந்தவர் அண்ணாதுரை (54). அதே பகுதியைச் சேர்ந்த அவரது உறவினர் அசோக் குமார் (35 ). இவர்கள் இருவருக்கும் கடந்த ஆண்டு கோவில் திருவிழாவின் போது தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் நேற்று மாலை அண்ணாதுரை கோலாரம் அருகே உள்ள கரிச்சிபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைக்கு சென்று மது அருந்தி கொண்டிருந்தார். அப்போது அசோக்குமாரும் கரிச்சிபாளையம் பகுதிக்கு சென்று மது அருந்திக் கொண்டிருந்தார். போதையில் முன் விரோதம் காரணமாக அசோக்குமாருக்கும், அண்ணாதுரைக்கும் வாய் தகராறு ஈடுபட்டு அடிதடி தகராறில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு இருந்தவர்கள் இருவரையும் சமாதானம் செய்து வைத்து அனுப்பி வைத்தனர். இருப்பினும் ஆத்திரமடைந்த அசோக்குமார் வீட்டிற்கு வந்து அவரது அண்ணன் சின்னசாமி (40), அவரது சகோதரி கோமதி (45) ,அவர்களது தந்தை வீரமணி (70) ஆகியோரிடம் டாஸ்மார்க் கடையில் நடந்த சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார். தொடர்ந்து வீரமணி, கோமதி, சின்னசாமி ஆகியோரை அசோக்குமார் அழைத்துக் கொண்டு அண்ணாதுரையின் வீட்டிற்கு சென்று தட்டிக் கேட்டுள்ளனர்.
அப்போதும் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அசோக்குமார் சூரி கத்தியால் அண்ணாதுரையை குத்தினார். இதில் படுகாயம் அடைந்த அண்ணாதுரை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அவர் உயிரிழந்ததை பார்த்த 4 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இது குறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் நல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர் .
பின்னர் அண்ணாதுரையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அசோக்குமார், சின்னசாமி, கோமதி, வீரமணி ஆகிய 4 பேரையும் பிடித்து நல்லூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.