உள்ளூர் செய்திகள்

செல்போன் கோபுரத்தை பிரித்து இரும்பு கடையில் விற்ற இட உரிமையாளர்- ஊழியர்கள் அதிர்ச்சி

Published On 2023-03-16 10:46 GMT   |   Update On 2023-03-16 10:46 GMT
  • கடந்த 6 ஆண்டுகளாக வாடகை பணம் செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது.
  • செல்போன் டவர் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

போரூர்:

கோயம்பேடு வடக்கு மாட வீதியில் சந்திரன், கருணாகரன், பாலகிருஷ்ணன் ஆகிய 3பேருக்கும் சொந்தமான நிலம் உள்ளது.

இவர்களது இடத்தில் கடந்த 2006-ம் ஆண்டு பிரபல தனியார் நிறுவனம் செல்போன் டவர் ஒன்றை அமைத்தது. இதற்காக முறையாக ஒப்பந்தம் போட்டு நிலத்தின் உரிமையாளர்களுக்கு மாதந்தோறும் வாடகை பணம் செலுத்தி வந்தனர்.

இந்நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு அந்த நிறுவனம் மூடப்பட்டதால் கடந்த 6ஆண்டுகளாக வாடகை பணம் செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டு உள்ள செல்போன் டவர்களை அவ்வப்போது அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் ஆய்வு செய்து பராமரித்து வந்தனர். கடந்த மாதம் வழக்கம் போல கோயம்பேடு வடக்கு மாட வீதியில் அமைக்கப்பட்டு உள்ள டவரை ஆய்வு செய்துவிட்டு சென்று இருந்தனர்.

இந்நிலையில் நேற்று காலை மீண்டும் ஊழியர்கள் அங்கு சென்றபோது செல்போன் டவர் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து செல்போன் நிறுவன மேலாளர் கிருஷ்ணமூர்த்தி கோயம்பேடு போலீசில் புகார் செய்தார். விசாரணையில் வாடகை பணம் தராததால் செல்போன் டவரை பிரித்து நில உரிமையாளர்கள் விற்று இருப்பது தெரிந்தது.

இதையடுத்து சந்திரன் உள்ளிட்ட 3பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது செல்போன் டவர் சேதமடைந்து கீழே விழும் நிலையில் இருந்ததால் அதை பிரித்து இரும்பு கடையில் விற்று விட்டதாக உரிமையாளர்கள் போலீசில் தெரிவித்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

செல்போன் கோபுரத்தின் மதிப்பு ரூ.8 லட்சத்து 62 ஆயிரம் ஆகும். வாடகை பணம் செலுத்தாததால் செல்போன் டவரை கழற்றி விற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News