பயணிகள் நிழற்குடை அமைப்பதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு: எம்எல்ஏ பேச்சுவார்த்தை
- நிழற்குடையால் கடை மறைக்கப்படுவதாகவும் வியாபாரம் பாதிக்கப்படுவதாகவும் கூறினர்
- பாதிப்பு இல்லாத வகையில் பொதுமக்களின் நலன் கருதி நிழற்குடை அமைக்கப்படும் என எம்எல்ஏ தெரிவித்தார்.
பொன்னேரி:
பொன்னேரி தொகுதிக்குட்பட்ட தச்சூர் கூட்டு ரோடு சந்திப்பு சாலையில் இருந்து தினம்தோறும் ஆந்திரா கும்மிடிப்பூண்டி பொன்னேரி செங்குன்றம், பெரியபாளையம், ஆரணி, சிறுவாபுரி, சென்னை உள்ளிட்ட பல பகுதிகளுக்கு தச்சூர் பகுதியில் இருந்து வேலைக்கு செல்வோர், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் உட்பட ஆயிரக்கணக்கான பேர் வந்து செல்கின்றனர்.
பேருந்திற்காக நீண்ட நேரம் காத்திருக்கும் பயணிகள் மழை வெயில் காலங்களில் அவதிப்பட்டு வந்த நிலையில், பொதுமக்கள், கல்லூரி மாணவர்கள் நிழற்குடை அமைப்பதற்கு பொன்னேரி சட்டமன்ற உறுப்பினரிடம் மனு அளித்தனர். இதனைத் தொடர்ந்து பொன்னேரி எம்எல்ஏ துரை சந்திரசேகர் பொது நிதியிலிருந்து நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணியில் அதிகாரிகள் இன்று ஈடுபட்டனர். அப்போது தச்சூர் பொன்னேரி நெடுஞ்சாலை அருகில் நிழற்குடை அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்தனர்.
இதற்கு அப்பகுதி வியாபாரிகள், கடை உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிழற்குடையால் கடை மறைக்கப்படுவதாகவும் வியாபாரம் பாதிக்கப்படுவதாகவும் கூறிய கடை உரிமையாளர்கள், அந்த இடத்தை அளவிடு செய்த ஊழியர்களிடம் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த பொன்னேரி எம்எல்ஏ துரை சந்திரசேகர் சம்பவ இடத்திற்கு வந்து வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். வியாபாரிகளுக்கு பாதிப்பு இல்லாத வகையில் பொதுமக்களின் நலன் கருதி நிழற்குடை அமைக்கப்படும் என தெரிவித்தார். அப்போது பஞ்செட்டி ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் உடனிருந்தனர்.