6 நாளில் 659 கஞ்சா வியாபாரிகள் கைது: 41 வங்கி கணக்குகள் முடக்கம்
- ‘ஆபரேஷன் கஞ்சா வேட்டை’யை (4.0) போலீசார் கடந்த 30-ந்தேதி தொடங்கினார்கள்.
- இந்த சோதனை வேட்டையில் தாம்பரத்தில் 15 டன் குட்கா பிடிப்பட்டது
சென்னை :
தமிழ்நாட்டில் கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் நடவடிக்கையாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் 'ஆபரேஷன் கஞ்சா வேட்டை'யை (4.0) போலீசார் கடந்த 30-ந்தேதி தொடங்கினார்கள். போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு அறிவுறுத்தலின்பேரில் பல்வேறு தனிப்படை போலீசார் இந்த வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இதன் மூலம் கடந்த 6 நாட்களில் தமிழகம் முழுவதும் 659 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் 5 பெண் கஞ்சா வியாபாரிகள் அடங்குவர். இவர்களிடம் இருந்து 728 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். கஞ்சா வியாபாரிகளின் 41 வங்கி கணக்குகளையும் முடக்கி உள்ளனர்.
இந்த சோதனை வேட்டையில் தாம்பரத்தில் 15 டன் குட்கா பிடிப்பட்டது. 'ஆபரேஷன் கஞ்சா வேட்டை' தொடரும் என்றும், கஞ்சா விற்பனை குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு தக்க பண வெகுமதி வழங்கப்படும் என்றும் டி.ஜி.பி. சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.