உள்ளூர் செய்திகள்

காணும் பொங்கலையொட்டி கொடிவேரி, பவானிசாகர், வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தில் அலை மோதிய கூட்டம்

Published On 2023-01-17 14:00 IST   |   Update On 2023-01-17 14:00:00 IST
  • பொங்கல் பண்டிகையையொட்டி தொடர்ந்து விடுமுறை விடப்பட்டு உள்ளது.
  • அனைத்து சுற்றுலா தலங்கள் மற்றும் கோவில்களிலும் மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

ஈரோடு:

பொங்கல் பண்டிகையையொட்டி தொடர்ந்து விடுமுறை விடப்பட்டு உள்ளது. இதையொட்டி கடந்த 3 நாட்களாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் பொது மக்கள் கூட்டம் அதிகரித்தது.

பவானிசாகர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணையில் கொட்டியபடி செல்கிறது. அதை கண்டு ரசிப்பதற்கும் தடுப்பணையில் குளித்து மகிழ்வதற்கும் தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்வார்கள். மேலும் விஷேசம் மற்றும் பண்டிகை காலங்களில் வழக்கத்தை விட அதிகமான சுற்றுலா பயணிகள் வருவார்கள்.

இந்த நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி கொடிவேரி தடுப்பணைக்கு கடந்த 3 நாட்களாக அதிகளவு மக்கள் வந்தனர். இதே போல் நேற்று மாட்டு பொங்கல் தினத்தையொட்டி வழக்கத்தைவிட அதிகமான சற்றுலா பயணிகள் வந்து தடுப்பணையில் கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர்.

நேற்று மட்டும் தடுப்பணையில் சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் குளித்து மகிழ்ந்தனர்.

இந்த நிலையில் காணும் பொங்கலையொட்டி இன்று காலை முதலே ஈரோடு மக்கள் மட்டுமின்றி வெளி மாவட்டத்தை சேர்ந்த மக்களும் தங்கள் குடும்பத்துடன் வந்திருந்தனர். தொடர்ந்து நேரம் செல்ல.. செல்ல மக்களின் கூட்டம் அலை மோதியது.

தொடர்ந்து அவர்கள் தடுப்பணையில் கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர். இதை தொடர்ந்து அவர்கள் கொண்டு வந்த உணவு வகைகளையும் குடும்பத்துடன் அமர்ந்து சாப்பிட்டனர். மேலும் பலர் வெளி பகுதியில் விற்பனை செய்த மீன் வகைகளையும் ருசித்தனர்.

இதையொட்டி அந்த பகுதியில் ஏராளமான கடை கள் அமைக்கப்பட்டு உள்ளது. இதையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதே போல் பவானிசாகர் அணை பூங்காவுக்கு கடந்த 2 நாட்களாக பொதுமக்கள் அதிகளவில் வந்திருந்தனர். இந்த நிலையில் காணும் பொங்கலையொட்டி இன்று வழக்கத்தை விட அதிகமான பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுடன் வந்திருந்தனர். தொடர்ந்து அவர்கள் பூங்காவில் ஊஞ்சல் விளையாடி மகிழ்ந்தனர். மேலும் சிறுவர் மற்றும் சிறுமிகள் சறுக்கு விளையாடி மகிழ்ந்தனர். மேலும் இயற்கை அழகை ரசித்தனர்.

தொடர்ந்து அணையில் கொட்டும் தண்ணீரை கண்டு களித்தனர். இதனால் இன்று மட்டும் பூங்காவுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் வந்தனர். இதனால் அணைக்கு செல்லும் ரோட்டில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது. இதனால் கோபிசெட்டிபாளையம் மற்றும் சத்தியமங்கலம் பஸ் நிலையங்களில் பஸ்சுக்காக ஏராளமான மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். மேலும் சென்னிமலை அருகே உள்ள வெள்ளோடு பறவைகள் சரணாலயத்துக்கு கடந்த 3 நாட்களாக மக்கள் அதிகளவில் வந்தனர். தொடர்ந்து இன்று காணும் பொங்களையொட்டி ஈரோடு, சென்னிமலை, காங்கேயம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் பலர் வந்திருந்தனர். அவர்கள் அங்கு இயற்கை அழகை ரசித்தனர்.

மேலும் பவானி கூடு துறையில் இன்று அதிகாலை முதலே பொதுமக்கள் பலர் வந்து புனித நீராடினர். தொடர்ந்து அவர்கள் சங்கமேஸ்வரர் மற்றும் வேதநாயகி அம்மனை வழிபட்டு சென்றனர்.

இதே போல் ஈரோடு மாவட்டத்தில் உள்ள காளிங்கராயன் வாய்க்காலுக்கு பொதுமக்கள் பலர் வந்து வந்து குளித்து மகிழ்ந்தனர். மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்கள் மற்றும் கோவில்களிலும் மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

Tags:    

Similar News