பள்ளத்தில் கவிழ்ந்த ஆம்னி பஸ்
விழுப்புரம் அருகே பள்ளத்தில் கவிழ்ந்த ஆம்னி பஸ்: உயிர் தப்பிய பயணிகள்
- ஆம்னி பஸ், திருவண்ணாமலையில் 3 பயணிகளை இறக்கிவிட்டு புதுவை நோக்கி வந்தது.
- அனைவருக்கும் முதலுதவி சிகிச்சை அளித்து அனுப்பி வைக்கப்பட்டனர்.
விழுப்புரம்:
பெங்களூருவில் இருந்து புதுவைக்கு ஆம்னி பஸ் நேற்று மாலை புறப்பட்டது. இந்த பஸ்சினை புதுவை மாநிலம் சண்முகாபுரத்தை சேர்ந்த கார்த்திகேயன் (வயது 39) என்பவர் ஓட்டி வந்தார். 30 பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று மதியம் 2.30 மணியளவில் பெங்களூருவில் இருந்து புறப்பட்ட இந்த ஆம்னி பஸ், திருவண்ணாமலையில் 3 பயணிகளை இறக்கிவிட்டு புதுவை நோக்கி வந்தது.
இந்த ஆம்னி பஸ் விழுப்புரம் மாவட்டம் கெடார் அருகே அத்தியூர் திருக்கை சாலையில் நேற்று இரவு 9 மணியளவில் வந்தது, அப்போது பஸ்சின் ஸ்டேரிங்கில் திடீர் கோளாறு ஏற்பட்டது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலை அருகே இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அப்போது பயணிகளின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் விரைந்து வந்தனர். பள்ளத்தில் கவிழ்ந்த பஸ்சில் இருந்த பயணிகளை மீட்டனர். அதிர்ஷ்டவசமாக யாரும் உயிரிழக்கவில்லை. இவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். டிரைவர் உள்ளிட்ட பயணிகளுக்கு லேசான காயங்கள் மட்டுமே இருந்ததால், அனைவருக்கும் முதலுதவி சிகிச்சை அளித்து அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து கெடார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.