சேலத்தில் கன மழைக்கு முதியவர் பலி
- நேற்று பெய்த மழையினால் பள்ளி மாணவர்கள் பள்ளியை விட்டு வெளியே வர முடியாமல் 3 மணி நேரம் தவித்தனர்.
- ராஜேந்திரன் (70) என்பவரும் தவறி விழுந்து நீரில் மூழ்கி இறந்தார்.
சேலம்:
சேலத்தில் நேற்று மாலை 3 மணி நேரம் கன மழை கொட்டியது. சேலம் நெத்திமேடு காளியம்மன் கோவிலில் இருந்து பாரதி மருத்துவமனை செல்லும் வழியில் கல்குடோன் என்னும் இடத்தில் மழை நீர் தேங்குவதால் அந்த வழியாக செல்லக்கூடிய வாகனங்கள் மற்றும் பொதுமக்கள், மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். இந்தப் பகுதியில் கல்வி நிறுவனங்கள் உள்ளன. நேற்று பெய்த மழையினால் பள்ளி மாணவர்கள் பள்ளியை விட்டு வெளியே வர முடியாமல் 3 மணி நேரம் தவித்தனர். இந்த சூழ்நிலையில் நேற்று அந்த பகுதியில் 8-க்கும் மேற்பட்டோர் இந்த தேங்கி நின்ற நீரிலே தவறி விழுந்தனர்.
அதில் பா. ஜ. க. இளைஞர் அணி முன்னாள் மாவட்ட பொதுச் செயலாளர் ராஜசேகரின் தந்தை ராஜேந்திரன் (70) என்பவரும் தவறி விழுந்து நீரில் மூழ்கி இறந்தார். இதுபற்றி அறிந்த சேலம் மாநகராட்சி ஆணையர் மற்றும் ஊழியர்கள்ஜேசிபி வரவைத்து அப்பகுதியில் உள்ள சாக்கடை தடுப்புச் சுவர்களை தற்காலிகமாக எடுத்து விட்டு நீர் செல்வதற்காக வழிவகை செய்தனர்.
ராஜவாய்க்காலாக இருது சாக்கடையாக மாறிய கால்வாயில் ஆக்கிரமிப்புகளை அகற்றி பெரும் உயிர் சேதங்களை தவிர்க்க வேண்டும் என பா.ஜ.க.வினர் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.