பர்கூர் ஒன்றியத்தில் ஒகேனக்கல் குடிநீர் வினியோகம் நிறுத்தம்
- மேம்பால விரிவாக்க பணிகளுக்காக குடிநீர் குழாய்களை மாற்றி அமைக்கும் பணிகள் நடைபெறுகிறது.
- 22-ந் தேதி வரை 3 நாட்களுக்கு ஒகேனக்கல் குடிநீர் வழங்க இயலாது.
கிருஷ்ணகிரி
காரகுப்பம் பிரிவு சாலை அருகே தேசிய நெடுஞ்சாலை மேம்பால விரிவாக்க பணிக்காக, பர்கூர் ஒன்றியத்தில் ஒகேனக்கல் குடிநீர் வினியோகம் 3 நாட்களுக்கு நிறுத்தம் செய்யப்படுகிறது.
இது குறித்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகப் பொறியாளர் சி.சிவமுருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கிருஷ்ணகிரி திட்ட பராமரிப்பு கோட்ட தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் கீழ் பராமரித்து வரும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பர்கூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஒப்பதவாடி, சிகரலப்பள்ளி, குட்டூர், பட்லபள்ளி, மகாதேவகொல்லஹள்ளி, பாலேதோட்டம், பண்டசீமானூர், ஜிங்கல்கதிரம்பட்டி, காட்டாகரம், கொண்டப்பநாயனபள்ளி, குள்ளம்பட்டி, பேராண்டபள்ளி, போச்சம்பள்ளி, பெருகோபனபள்ளி, புளியம்பட்டி, தாதம்பட்டி, தொகரபள்ளி, வலசகவுண்டனூர் மற்றும் வெப்பாலம்பட்டி ஆகிய ஊராட்சிகளுக்கு தினசரி குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது காரகுப்பம் பிரிவு சாலை அருகில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மேம்பால விரிவாக்க பணிகளுக்காக குடிநீர் குழாய்களை மாற்றி அமைக்கும் பணிகள் மேற்கொள்ள இருப்பதால் வருகிற 20-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை 3 நாட்களுக்கு ஒகேனக்கல் குடிநீர் வழங்க இயலாது.
எனவே அந்தந்த ஊராட்சிகளுக்கு உட்பட்ட பொதுமக்கள் இம்மூன்று நாட்களுக்கு உள்ளூர் நீர் ஆதாரங்களை பயன்படுத்திக்கொண்டு, குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.