உள்ளூர் செய்திகள்

ரதவீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் ஈடுபட்ட மாநகராட்சி ஊழியர்கள்.

நெல்லை டவுன் ரதவீதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றம்-மாநகராட்சி நடவடிக்கை

Published On 2022-06-24 09:36 GMT   |   Update On 2022-06-24 09:36 GMT
  • 4 ரதவீதிகளிலும் தார்ச்சாலைகள் சீரமைக்கப்பட்டு தூய்மைப்பணியாளர்கள் மூலம் சுத்தப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
  • சாலையோரம் உள்ள விளம்பர பலகைகள் உள்ளிட்டவைகள் அகற்றப்பட்டன.

நெல்லை:

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் நெல்லையப்பர் கோவிலும் ஒன்று. நெல்லையப்பர் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் சிறப்பு பெற்றது ஆனித்தேரோட்டம். இந்தாண்டு திருவிழா வருகிற 3-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை)கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தேரோட்டம் 11-ந் தேதி நடக்கிறது. கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு பின்னர் கோலாகலமாக நடைபெறுகிறது.

இதைத்தொடர்ந்து ஆனித்தேரோட்ட ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. தேரோட்டத்தையொட்டி ரதவீதிகளில் சாலைகளை புதுப்பிக்கவும், அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும் பக்தர்கள் சார்பில் மாநகராட்சிக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி மாநகராட்சி சார்பில் கோவிலை சுற்றியுள்ள 4 ரதவீதிகளிலும் தார்ச்சாலைகள் சீரமைக்கப்பட்டு தூய்மைப்பணியாளர்கள் மூலம் சுத்தப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நெல்லை மண்டல உதவி கமிஷனர் பைஜூ தலைமையில் டவுன் ரதவீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் இன்று ஈடுபட்டனர். அப்போது சாலையோரம் உள்ள விளம்பர பலகைகள் உள்ளிட்டவைகள் அகற்றப்பட்டன.

மேலும் அனுமதியின்றி நிறுத்தப்பட்டிருந்த தள்ளுவண்டி கடைகள் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்ற 2 நாட்களுக்கு முன்பு அறிவுறுத்தி இருந்தனர். ஆனால் அவர்கள் அகற்றாததால் இன்று மாநகராட்சி மூலம் எடுத்து செல்லப்பட்டது. சில கடைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும் போலீசார் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்றது.

Tags:    

Similar News