உள்ளூர் செய்திகள்

வாலிபரை தாக்கியவர்களை கைது செய்து போலீசார் அழைத்து சென்ற போது எடுத்தபடம்.

சேலம் வாலிபரை தாக்கிய வடமாநில கும்பல்

Published On 2023-01-31 15:06 IST   |   Update On 2023-01-31 15:06:00 IST
  • திருட வந்தவர் என நினைத்து கயிற்றால் கட்டி போட்டு சரமாரியாக தாக்கினர்.
  • 7 பேரையும் போலீசார் கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர்.

சூளகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள சின்னாறு பகுதியில் காய்கறிகள் மற்றும் பழங்கள் பதப்படுத்தும் புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.

இந்த கட்டிட காண்டிராக்டர் பணிகளை ஓசூர் பகுதியை சேர்ந்த மணி என்பவர் எடுத்து நடத்தி வருகிறார். அங்கு கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியை சேர்ந்த நாராயணன் என்பவர் வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் அவர் வேலையை விட்டு நின்று விட்டார். இதனிடையே சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள கந்தனூரில் வசிக்கும் தனது அண்ணன் மகன் பிரபாகரன் (வயது 33) என்பவரிடம், சின்னாறில் வேலை உள்ளதாகவும், நீ அங்கு வேலை பார்க்குமாறு நாராயணன் கூறினார்.

அதை நம்பி பிரபாகரன் சின்னாறுக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு வேலைக்கு வந்தார். அங்கேயே தங்கி வேலை செய்து வந்தார். கடந்த 28-ந் தேதி இரவு அந்த பகுதியில் உள்ள கம்பி வேலி அருகில் பிரபாகரன் அமர்ந்து இருந்தார். அந்த வழியாக என்ஜினீயர் தங்கராஜ் மற்றும் வடமாநில வாலிபர்கள் 5 பேர் வந்தனர்.

அப்போது அவர்கள் பிரபாகரனை பார்த்து இரும்பு பொருட்களை திருட வந்தவர் என நினைத்து கயிற்றால் கட்டி போட்டு சரமாரியாக தாக்கினர். மேலும் என்ஜினீயர் தங்கராஜ் கட்டிட உரிமையாளருக்கு போன் செய்து தகவல் தெரிவித்தார்.

மேலும் பிரபாகரனை அந்த பகுதியில் உள்ள அறையில் கட்டி போட்டு இரும்பு கம்பியால் அவர்கள் சரமாரியாக தாக்கினர். இதில் பிரபாகரன் படுகாயம் அடைந்தார். மேலும் அவரிடம் இரும்பு பொருட்களை கொடுக்கவில்லை என்றால் கொலை செய்து விடுவேன் என்று அவர்கள் மிரட்டினர். மேலும் இவற்றை வீடியோவாக எடுத்து, ஊத்தங்கரையில் உள்ள நாராயணனுக்கு அனுப்பி வைத்து, அவர் எடுத்து சென்ற இரும்பு பொருட்களை கொடு. இல்லாவிட்டால் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் பணம் கொடு என மிரட்டினர்.

இதுகுறித்து நாராயணன், சூளகிரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் அங்கு சென்று கன்டெய்னர் அறை ஒன்றில் கயிற்றால் கட்டி அடைத்து வைத்திருந்த பிரபாகரனை மீட்டனர். பின்னர் அவரை ஆம்புலன்ஸ் வேனில் ஏற்றி சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக பிரபாகரன் கொடுத்த புகாரின் பேரில் சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து காண்டிராக்டர் ஓசூர் சப்தகிரி நகரை சேர்ந்த மணி (47), என்ஜினீயர் தருமபுரி நல்லம்பள்ளி தாலுகா திம்மராயன் கொட்டாய் தங்கராஜ் (33), வடமாநிலத்தை சேர்ந்த ஷியாம்சுந்தர் (46), பாலேந்தர் (28), சுசில்குமார் (24), அர்ஜூன் (24), திப்பந்தர் சோக்கியா (22), ஆகிய 7 பேரையும் போலீசார் கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர். 

Tags:    

Similar News