போடி அருகே இலவம் மரத்தில் காய்கள் வெடித்து சிதறிகிடக்கும் காட்சி.
போடி: இலவங்காய் விளைச்சல் அதிகரித்தும் விலை இல்லாததால் வேதனை
- பழுத்து காய்ந்த இலவம் காய்கள் வெடித்து சிதறி சாலைகளில் பரவி வீணாகி வருகிறது
- இலவம் பஞ்சுக்கு உரிய விலை கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடி மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் சுமார் 20000-க்கும் மேற்பட்ட ஏக்கரில் இலவம் மரங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. குரங்கனி, கொட்டக்குடி, கொம்புதூக்கி , சிரக்காடு, மேலப்பரவு, உலக்குருட்டி உள்ளிட்ட மலைப்பகுதிகளில் அதிகம் இலவம் மரங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இந்த காயிலிருந்து பெறப்படும் பஞ்சு மெத்தை, தலையணை, இருக்கைகள் தயாரிக்க அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. தரமான இலவம் பஞ்சால் செய்யப்படும் மெத்தை, தலையணைகள் உடல் வெப்ப நிலையை சீராக வைத்திருக்கும் என்பதால் இங்கு விளையும் இலவம் பஞ்சுக்கு வெளிச்சந்தையில் நல்ல மதிப்பு உண்டு. இதனால் உலகளவில் பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
நயம் பஞ்சு ஒரு கிலோ ரூ.280 முதல் ரூ.380 வரை விற்கப்படுகிறது. விதையுடன் கூடிய பஞ்சு கிலோ ரூ.80லிருந்து ரூ.120 வரை விற்கப்பட்டு வருகிறது. இந்த வருடம் இலவம்காய் அமோக விளைச்சல் அடைந்துள்ள போதும் கொள்முதல் விலையில் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. ஒரு கிலோ பஞ்சு ரூ.45லிருந்து ரூ.50 வரை மட்டுமே விற்பனையாவதால் விவசாயிகள் நஷ்டமடைந்து வருவதாக தெரிவிக்கின்றனர்.
இந்த மரங்கள் 60 அடியில் இருந்து 80 அடி வரை வளரக்கூடியது. மரம் முழுவதும் முட்கள் நிறைந்ததாக இருக்கும். எனவே அனுபவம் வாய்ந்த நபர்கள் மட்டுமே மரத்தின் உச்சியில் ஏறி காய்களை பறிக்கும் பணியில் ஈடுபடுவார்கள். இதற்காக நபர் ஒருவருக்கு ஒரு நாளைக்கு ரூ.1000 முதல் ரூ.1100 வரை சம்பளம் கொடுக்கப்படுகிறது.
தற்போது பஞ்சு விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் அதிக கூலி கொடுத்து காய்களை பறிக்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டள்ளனர். எனவே பழுத்து காய்ந்த இலவம் காய்கள் வெடித்து சிதறி சாலைகளில் பரவி வீணாகி வருகிறது. கடந்த ஆண்டு விலை , விளைச்சல் குறைவாக இருந்ததால் விவசாயிகள் லாபம் இல்லாமல் பாதிக்கப்பட்டனர். இந்த ஆண்டு விளைச்சல் அதிகரித்தும் உற்பத்தி செலவை காட்டிலும் வியாபாரிகள் கொள்முதல் விலை குறைவாக உள்ளதால் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். தரத்திலும், உற்பத்தியிலும், ஏற்றுமதியிலும் முதன்மையாக உள்ள போடி சுற்றுப்பகுதியில் விளையும் இலவம் பஞ்சுக்கு உரிய விலை கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.