கேரளாவில் நிபா வைரஸ் பரவிவரும் நிலையில் போடிமெட்டு மலைச்சாலையில் எந்தவித சோதனையும் செய்யாமல் வாகனங்கள் அனுமதிக்கப்படுகிறது.
கேரளாவில் பரவும் நிபா வைரஸ் தேனி மாவட்ட எல்லையில் சுகாதார துறையினர் அலட்சியம்
- தமிழகத்தில் இருந்து ஆயிரக்கணக்கான தொழி லாளர்கள் கேரளாவிற்கு ஏலக்காய், தேயிலை தோட்டங்களுக்கு வேலைக்குச் சென்று வருகின்றனர்.
- ஆனால் போடிமெட்டு சோதனை சாவடியில் எந்தவித முன்னேற்பாடுகளும் செய்யாமல் வாகனங்கள் வழக்கம்போல் சென்றுவர அனுமதிக்கப்படுகிறது.
மேலசொக்கநாதபுரம்:
கேரளா மாநிலத்தில் தற்போது பருவநிலை மாற்றம் காரணமாக நிபா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில் கோழிக்கோடு பகுதியில் இந்த வைரஸ் தாக்குதலால் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் தொற்று மேலும் பரவாமல் இருக்க அம்மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் படி தமிழகத்தில் கேரளாவை ஒட்டியுள்ள கோவை, கன்னியாகுமரி, நீலகிரி, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் பரிசோதனை செய்யப்பட்டு யாருக்கேனும் நோய்தொற்று அறிகுறி உள்ளதா என சோதனை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் இருந்து தினந்தோறும் காய்கறிகள், பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அதிகளவில் கொண்டு செல்லப்படுகிறது. மேலும் தமிழகத்தில் இருந்து ஆயிரக்கணக்கான தொழி லாளர்கள் கேரளாவிற்கு ஏலக்காய், தேயிலை தோட்டங்களுக்கு வேலைக்குச் சென்று வருகின்றனர். இதனால் நோய் பரவலை தடுக்க மருத்துவ முகாம்கள், சோதனை சாவடியில் கண்காணிப்பு நடத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால் போடிமெட்டு சோதனை சாவடியில் எந்தவித முன்னேற்பாடுகளும் செய்யாமல் வாகனங்கள் வழக்கம்போல் சென்றுவர அனுமதிக்கப்படுகிறது. இதேபோல் கம்பம்மெட்டு, குமுளி வழிப்பாதையிலும் வாகனங்கள் சோதனை செய்யப்படுவதில்லை என தெரிவித்துள்ளனர். எனவே சுகாதாரத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.