உள்ளூர் செய்திகள்

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது: கடலூர் மாவட்ட மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க செல்லக் கூடாது- மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை

Published On 2022-12-15 07:23 GMT   |   Update On 2022-12-15 07:23 GMT
  • கடந்த 11-ந்தேதி மீனவர்கள் மீன் பிடிக்க செல்லலாம் என 10-ந்தேதி இரவு மீன்வளத்துறை அதிகாரிகள் சார்பில் அறிவிக்கப்பட்டது‌.
  • சில தினங்களுக்கு முன்பு மாண்டஸ் புயல் உருவாகி மாமல்லபுரம் பகுதியில் கரையை கடந்தது.

கடலூர்:

வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது‌. இதன் காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் வருகிற நாட்களில் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பு இருப்பதாகவும், புயலாக மாறினால் தமிழகத்தை யொட்டி கரையை கடக்கலாம் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துக் உள்ளனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாண்டஸ் புயல் உருவாகி மாமல்லபுரம் பகுதியில் கரையை கடந்தது. இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பலத்த காற்று மற்றும் மழை பெய்து வந்த நிலையில் கடும் குளிரும் நிலவி வந்ததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர். மேலும் கடந்த 6-ந்தேதி முதல் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை. ஆனால் கடந்த 11-ந்தேதி மீனவர்கள் மீன் பிடிக்க செல்லலாம் என 10-ந்தேதி இரவு மீன்வளத்துறை அதிகாரிகள் சார்பில் அறிவிக்கப்பட்டது‌.

இதனை தொடர்ந்து மீனவர்கள் மீன் பிடிக்க சென்ற நிலையில் 11-ந்தேதி காலையில் திடீரென்று மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்லக்கூடாது என தெரிவித்ததால் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியும் குழப்பமும் நிலவி வந்தது. இந்த நிலையில் 12-ந்தேதி முதல் மீனவர்கள் வழக்கம் போல் மீன்பிடிக்க செல்லலாம் என மீண்டும் மீன்வளத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால் புயல் ஓய்ந்த நிலையில் கடலில் கடல் சீற்றம் அதிகரித்து காணப்பட்டு வந்தது. ஆனால் திங்கட்கிழமை மீனவர்கள் மீன்பிடிக்க சென்று வருகின்றனர். இந்த நிலையில் இன்று 15 ந்தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால் தங்கு கடல் மற்றும் ஆழ்கடல் மீன்பிடி படகுகள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன் பிடிக்க செல்லவேண்டாம் . மேலும் வங்க கடல் பகுதிகளில் மீன் பிடிப்பில் ஈடுபட்டுள்ள ஆழ்கடல் மற்றும் தங்கு கடல் படகுகள் அனைத்தும் அருகில் உள்ள துறைமுகங்களுக்கு உடனடியாக கரைத்திரும்ப வேண்டும். மீனவர்கள் இந்த அறிவிப்பை தவறாது பின்பற்றி அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர். 

Tags:    

Similar News