எண்ணேக்கொள் அணைக்கட்டில் இருந்து ரூ.233 கோடி மதிப்பில் செம்பட முத்தூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வலது மற்றும் இடது புற கால்வாய்கள் அமைக்கும் பணிகளை கலெக்டர் சரயு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
எண்ணேகொள் கால்வாய் திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு
- தொட்டிபாலம் அமைக்கும் பணிகளை நேற்று கலெக்டர் சரயு நேரில் சென்று ஆய்வு செய்தார்.
- இதுவரை இடதுபுற கால்வாய் 2500 மீட்டர் அளவிற்கும், வலதுபுற கால்வாய் 8500 மீட்டர் அளவிற்கும் கால்வாய் வெட்டும் பணிகள் என 30 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே எண்ணேகொள் அணைக்கட்டு உள்ளது.
இந்த அணைக்கட்டு வழியாக தென்பெண்ணை ஆற்றில் இருந்து வெள்ளக்காலங்கில் வரும் உபரிநீரை, வலது மற்றம் இடதுபுறம் காலவாய் அமைத்து, கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டத்தில் உள்ள வறட்சியான பகுதிகளில் உள்ள ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்ல எண்ணேகொள் கால்வாய் திட்டம் அறிவிக்கப்பட்டது.
அதற்காக ரூ.233 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கால்வாய் அமைக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது. எண்ணேகொள், செம்படமுத்தூர், ராகிமானப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் நடந்து வரும் வலது மற்றும் இடதுபுற கால்வாய்கள் மற்றும் நீர் வழங்கு கால்வாய்கள், தொட்டிபாலம் அமைக்கும் பணிகளை நேற்று கலெக்டர் சரயு நேரில் சென்று ஆய்வு செய்தார்.
இது குறித்து அவர் கூறுகையில், எணணேகொள் அணைக்கட்டு தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கிருஷ்ணகிரி அணைக்கு மேல்நிலை 16 கி.மீ தொலைவில் உள்ளது. இந்த அணைகட்டில் இருந்து வலதுபுறத்தில் 50.65 கி.மீ தொலைவிற்கு பிரதான கால்வாயும், 5.51 கி.மீ கிளைக் கால்வாயும் வெட்டும் பணிகள் நடந்து வருகிறது.
அதே போல் இடதுபுறத்தில் சுமார் 22.65 கி.மீ தொலைவிற்கு பிரதான கால்வாயும், 2.40 கி.மீ தொலைவிற்கு கிளைக் கால்வாய் வெட்டும் பணிகள் நடந்து வருகிறது. இத்திட்டத்திற்கு வலதுபுற கால்வாய்க்கு தேவையான 207.59 மில்லியன் கன அடியும், இடதுபுற கால்வாய்க்கு தேவையான 161 மில்லியன் கன அடியும் என மொத்தம் 368.59 மில்லியன் கன அடி தண்ணீர் வழங்க ஏதுவாக கால்வாய் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதே போல் ராகிமனப்பள்ளி ஏரியின் குறுக்கே நீர் கொண்டு செல்லும் வகையில் 450 மீட்டர் நீளம் தொட்டிபாலம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதுவரை இடதுபுற கால்வாய் 2500 மீட்டர் அளவிற்கும், வலதுபுற கால்வாய் 8500 மீட்டர் அளவிற்கும் கால்வாய் வெட்டும் பணிகள் என 30 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து கால்வாய் வெட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இத்திட்டம் மூலம் சுமார் 33 ஏரிகள் மற்றும் ஒரு அணையின் பாசன பரப்பான 3,408 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும்.
இந்த திட்டம் செயல்படுத்துவதினால் 29,942.05 மெட்ரிக் டன் கூடுதல் உணவு உற்பத்தி செய்ய முடியும். மேலும், இந்த கால்வாய் பணிகளை விரைந்து முடித்து விவசாயிகளின் பயன்பாட்டிற்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீர்வளத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.
இந்த ஆய்வின் போது, நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் அறிவொளி, உதவி பொறியாளர்கள் சையத், கார்த்திகேயன், காளிபிரியன் மற்றும் நீர்வளத்துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.