உள்ளூர் செய்திகள்

தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்த காட்சி.

2 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெற்ற கைலாசநாதர் கோவில் தேரோட்டம்

Published On 2022-06-07 15:37 IST   |   Update On 2022-06-07 15:37:00 IST
  • சிறப்பு அலங்காரத்தில் கைலாசநார் சுவாமி தேருக்கு எழுந்தருளினார்.
  • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

நெல்லை:

நெல்லை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் சந்திப்பு கைலாசபுரம் கைலாசநாதர் கோவிலும் ஒன்று.

இந்த கோவிலில் வைகாசி திருவிழா கடந்த 30-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.

10-நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் காலை, மாலை நேரங்களில் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பல்வேறு வாகனங்களில் வீதி உலா நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

8-ம் திருவிழாவான நேற்று காலை சிவகாமி அம்பாள், சமேத ஆனந்த நடராஜருக்கு பச்சை சாத்தி செப்பு சப்பரத்தில் வீதி உலா நடந்தது.

மாலை பரிவேட்டைக்கு குதிரை வாகனத்தில் சந்திரசேகரர் எழுந்தருளினார். தொடர்ந்து செப்பு சப்பரத்தில் சுவாமி கங்காளநாதர் வீதி உலா நடந்தது.

இரவில் சுவாமி அம்பாள் பூஞ்சப்பரத்தில் வீதி உலா மற்றும் தேர் கடாட்சம் நடந்தது.

சிகர நிகழ்ச்சியான தேர் திருவிழா கடந்த 2 ஆண்டுகளுக்கு பின்பு இன்று நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை முதலே சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெற்றது.

தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் கைலாசநார் சுவாமி தேருக்கு எழுந்தருளினார். பின்னர் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டு நான்குரதவீதிகளிலும் சென்றது.

தொடர்ந்து காணிக்கையாக வழங்கப்பட்டு வந்த பழங்கள் சூரைவிடும் நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.

தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

10-ம் திருவிழாவான நாளை 8-ந் தேதி கைலாசபுரம் தாமிரபரணி ஆற்றில் சுவாமி அம்பாள் தீர்த்தவாரியும், அதைத்தொடர்ந்து சிறப்பு அலங்கார தீபாராதனை, வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி அம்பாள் வீதி உலா நடைபெறுகிறது.

Tags:    

Similar News