உள்ளூர் செய்திகள்

மரக்காணம் அருகே சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவர் உடல்நலக்குறைவால் சாவு: போலீசார் விசாரணை

Published On 2023-07-25 07:57 GMT   |   Update On 2023-07-25 07:57 GMT
  • மெத்தனால் கலந்த விஷ சாராயம் குடித்து 14 பேர் பலியாகினர்.
  • தொடர் சிகிச்சை பெற்று வந்த முத்து நேற்று மாலை இறந்துவிட்டார்.

விழுப்புரம்: 

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பம் மீனவர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மெத்தனால் கலந்த விஷ சாராயம் குடித்து 14 பேர் பலியாகினர். இதில் 50-க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதில் ஒரு சிலர் வீடுகளில் படுத்தபடுக்கையில் தொடர் சிகிச்சையிலும், மருத்துவ கண்காணப்பிலும் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தை சேர்ந்த முத்து (வயது 59). இவருக்கு நேற்று முன்தினம் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவரது குடும்பத்தார், அவரை மரக்காணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்த சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அங்கு தொடர் சிகிச்சை பெற்று வந்த முத்து நேற்று மாலை இறந்துவிட்டார். இது குறித்து அவரது உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் மரக்காணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே, விஷ சாராயம் குடித்ததால் தான் முத்து இறந்துவிட்டார் என்று அவரது குடும்பத்தார் புகார் அளித்தனர். இதன் பேரில் மரக்காணம் வருவாய்த்துறை அதிகாரிகள், மீன்வளத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். முத்துவின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே அவர் எதனால் இறந்தார் என தெரிய வரும் என்று போலீசார் கூறி, அவரது குடும்பத்தார் மற்றும் உறவினர்களை அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News