சூளகிரி அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலியான சம்பவத்தில் திருப்பம் -திருட சென்றபோது உயிரிழந்துள்ளார்
- மாடியிலிருந்து கீழே விழுந்து இறந்து கிடந்தார்.
- வீடுகளில் புகுந்து திருடுவதையே தொழிலாக வைத்திருந்துள்ளார்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே நேற்று அதிகாலை சுமார் 18 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் மின்கம்பியில் உரசி ஒரு வீட்டின் மாடியிலிருந்து கீழே விழுந்து இறந்து கிடந்தார்.
இது குறித்து தேன்கனிக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து அந்த வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் இறந்து கிடந்த வாலிபர் சூளகிரி பகுதியை சேர்ந்த பாட்ஷா என்பவரது மகன் மன்சூர் (வயது 18) என்பது தெரிய வந்தது. இவர் அருகேயுள்ள மாது என்பவரது வீட்டு மாடியிலிருந்து விழுந்து இறந்திருந்தார். இவர் எதற்காக அந்த வீட்டு மாடியில் ஏறினார்? என்று போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது திடுக்கிடும் தகவல் தெரிய வந்தது. மன்சூர் வீடுகளில் புகுந்து திருடுவதையே தொழிலாக வைத்திருந்துள்ளார். அவ்வாறு மாது என்பவரின் வீட்டில் திருட சென்றபோது அவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது தெரிய வந்துள்ளது.