நாய்கள் குறுக்கே வந்ததால் மோட்டார் சைக்கிளில் சென்ற தொழிலாளி பள்ளத்தில் விழுந்து சாவு
- காவேரி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேஷ் (45). இவரது மனைவி குப்பம்மா (40). இவர்கள் கூலித்தொழில் செய்து வருகின்றனர்.
- வளையபட்டி-தூசூர் சாலையில் உள்ள குருப்பம்பட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது நாய்கள் சாலையின் குறுக்கே திடீரென ஓடி வந்துள்ளது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் மோகனூர் தாலுகா பீமநாயக்கனூர் காவேரி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேஷ் (45). இவரது மனைவி குப்பம்மா (40). இவர்கள் கூலித்தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் வெங்கடேஷ் வளையபட்டி பகுதிக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். வளையபட்டி-தூசூர் சாலையில் உள்ள குருப்பம்பட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது நாய்கள் சாலையின் குறுக்கே திடீரென ஓடி வந்துள்ளது. இதை பார்த்த வெங்கடேஷ் பிரேக் போட்டதில் நிலை தடுமாறி சாலையோர பள்ளத்தில் விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அந்த வழியாக வந்தவர்கள் அவரை மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் வெங்கடேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து வெங்கடேஷின் மனைவி குப்பம்மா மோகனூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளைய சூரியன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.