உள்ளூர் செய்திகள்

தயாரிப்பு தேதி குறிப்பிடாமல் உணவுப்பொருள் விற்பனை10 பேக்கரிகள் ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

Published On 2023-09-28 14:14 IST   |   Update On 2023-09-28 14:14:00 IST
  • இனிப்பு மற்றும் காரவகை உணவு பண்டங்களின் பொட்டலங்களில் உற்பத்தி தேதி, காலாவதியாகும் தேதி உள்ளிட்ட விவரங்கள் இல்லாமல் விற்பனை
  • இதன் மூலம் ஒரே நாளில் உணவு சம்மந்தப்பட்ட 10 வழக்குகளில் நாமக்கல் நுகர்வோர் கோர்ட்டில் சமரச தீர்வு ஏற்பட்டுள்ளது.

நாமக்கல்:

இனிப்பு மற்றும் காரவகை உணவு பண்டங்களின் பொட்டலங்களில் உற்பத்தி தேதி, காலாவதியாகும் தேதி உள்ளிட்ட விவரங்கள் இல்லாமல் விற்பனை செய்ததாக நாமக்கல், திருச்சி, கோவை மாவட்டங்களில் உள்ள கடைகளின் மீது ஏற்கனவே தொடரப்பட்ட பல வழக்குகள் நாமக்கல் நுகர்வோர் கோர்ட்டில் நிலுவையில் உள்ளன.

இந்த வழக்குகள் உட்பட 53 வழக்குகளில் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் நேற்று நீதிபதி டாக்டர் ராமராஜ் மற்றும் உறுப்பினர் ரத்தினசாமி ஆகியோர் முன்னிலையில் சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றது.

ரூ.1 லட்சம் இழப்பீடு

நாமக்கல்லில் இனிப்பு மற்றும் கார வகைகளை விற்பனை செய்யும் 6 பேக்கரி உரிமையாளர்கள், திருச்சி மாவட்டத்தில் உள்ள 2 கடை உரிமையாளர்கள், கோவையில் உள்ள 2 கடை உரிமையாளர்கள் சமரச பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டு பாதிக்கப்பட்ட நுகர்வோர்களுக்கு கோர்ட்டு உத்தரவுப்படி ரூ.1 லட்சம் இழப்பீடு செலுத்தினர். இதன் மூலம் ஒரே நாளில் உணவு சம்மந்தப்பட்ட 10 வழக்குகளில் நாமக்கல் நுகர்வோர் கோர்ட்டில் சமரச தீர்வு ஏற்பட்டுள்ளது.

மற்றொரு வழக்கு

நாமக்கல்லில் உள்ள மின்சாதன பொருட்கள் விற்பனை செய்யும் ஒரு கடையில் வாங்கப்பட்ட பொருட்களுக்கான ரசீதில் விற்பனை செய்த பொருட்கள் திரும்ப வாங்கப்படமாட்டாது என அச்சிடப்பட்டது தவறு என நுகர்வோர் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கில் கடை உரிமையாளர் நுகர்வேருக்கு ரூ.10 ஆயிரம் இழப்பீடு வழங்கினார்.

மற்றொரு வழக்கில் நாமக்கல்லில் உள்ள தனியார் சூப்பர் மார்க்கெட் நிர்வாகம் வாடிக்கையாளரிடம் கேரி பேக் கொடுத்ததற்கு ரூ.10 வசூலித்தது தவறு என தொடரப்பட்ட வழக்கில் அந்த நிறுவனம் நுகர்வோருக்கு இழப்பீடாக ரூ.2,000 செலுத்தியது. முதல் சுற்று பேச்சு வார்த்தையில் சமரசம் ஏற்பட வாய்ப்பில்லாத சில வழக்குகள் 2-வது சுற்று பேச்சு வார்த்தைக்காக வரும் அக்டோபர் 6-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News