உள்ளூர் செய்திகள்

பரமத்திவேலூர் பகுதிகளில் செயல்படும் மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் மீது வாடிக்கையாளர்கள் சரமாரி புகார்

Published On 2023-05-24 15:31 IST   |   Update On 2023-05-24 15:31:00 IST
  • சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 6 கிளைகள், பரமத்தி, பரமத்திவேலூர், கந்தம்பாளையம், சோழசிராமணி, பிலிக்கல்பாளையம், ஜேடர்பாளையம் பகுதிகளில் செயல்படுகிறது.
  • முக்கிய பிரமுகர்கள், தெரிந்தவர்கள் வந்தால் மட்டுமே பணம் பரிமாற்றம் செய்கின்றனர் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 6 கிளைகள், பரமத்தி, பரமத்திவேலூர், கந்தம்பாளையம், சோழசிராமணி, பிலிக்கல்பாளையம், ஜேடர்பாளையம் பகுதிகளில் செயல்படுகிறது.

இந்த வங்கிகளில் கடந்த சில மாதங்களாக, உணவு இடைவேளைக்கு பிறகு பணம் வரவு, செலவு செய்வது கிடையாது. முக்கிய பிரமுகர்கள், தெரிந்தவர்கள் வந்தால் மட்டுமே பணம் பரிமாற்றம் செய்கின்றனர் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும் காலை நேரத்தில் வங்கிக்கு ஊழியர்கள் தாமதமாக வருவதாகவும், அதேபோல் மாலை 5 மணி வரை வங்கி செயல்பட வேண்டிய நிலையில், மாலை 4 மணிக்கு முன்னதாகவே வரவு, செலவுகளை ஊழியர்கள் நிறுத்திக் கொள்வதாகவும் புகார் எழுந்துள்ளது.

இது குறித்து வாடிக்கையாளர்கள் கூறும்போது, வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு உரிய பதில் கிடைப்பதில்லை. காலை நேரத்தில் சென்றால் நெட்வொர்க் கிடைக்கவில்லை, கம்ப்யூட்டர் பழுது என சாக்குபோக்கு சொல்கின்றனர். மாலை நேரத்தில் 4 மணிக்கு முன்னதாகவே கணக்கை முடித்து விடுகின்றனர். இதை கண்காணிக்க வேண்டிய அதிகாரிகள் சரிவர பணியாற்ற வில்லை. நாமக்கல் மாவட்ட நிர்வாகம் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். 

Tags:    

Similar News