உள்ளூர் செய்திகள்

ஜேடர்பாளையத்தில் வடமாநில இளைஞர் கொலை-4 வாலிபர்களிடம் போலீசார் தீவிர விசாரணை

Published On 2023-05-29 08:11 GMT   |   Update On 2023-05-29 08:11 GMT
  • பட்டதாரி இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் போலீசார் 17 வயது சிறுவனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
  • உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்ய கோரியும், வழக்கை சி.பி.சி.ஐ.டி.- க்கு மாற்றக்கோரியும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

பரமத்தி வேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே கரப்பாளையத்தில் கடந்த மார்ச் மாதம் 11-ந் தேதி பட்டதாரி இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் போலீசார் 17 வயது சிறுவனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்ய கோரியும், வழக்கை சி.பி.சி.ஐ.டி.- க்கு மாற்றக்கோரியும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இதனிடையே வெல்லம் தயாரிக்கும் ஆலை கொட்டகைக்கு பயன்படக்கூடிய டிராக்டர்களுக்கும், பள்ளி வாகனத்திற்கு தீ வைப்பு, வீடுகளுக்கு பெட்ரோல் மற்றும் மண்ணெண்னை குண்டு வீசியது, உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்றன.

கடந்த 13-ந் தேதி ஜேடர்பாளையம் பகுதியைச் சேர்ந்த முத்துசாமி என்பவருடைய வெல்லம் தயாரிக்கும் ஆலைக் கொட்டகையில் பணிபுரியும் வட மாநில இளைஞர்கள் 4 பேர் மீது மர்ம கும்பல் பெட்ரோலை ஊற்றி தீ வைத்ததில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ராகேஸ் (19) என்ற இளைஞர் உயிரிழந்தார். 3 பேர் காயம் அடைந்தனர். இதனை தொடர்ந்து ஆலைக் கொட்டகை அருகே முத்துசாமியின் மருமகன் தோட்டத்தில் இருந்த சுமார் 600-க்கும் மேற்பட்ட வாழைகள் வெட்டி சாய்க்கப்பட்டது.

இப்பகுதியில் நடந்துவரும் தொடர் அசம்பாவித சம்பவங்கள் காரணமாக பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பும், தீவிர இரவு நேர ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இளம்பெண் கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு, சி.பி.சி.ஐ.டி. போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

4 பேரிடம் தீவிர விசாரணை

இந்த நிலையில் போலீசார் சந்தேகத்தின் பேரில், ஜேடர்பாளையம் பகுதியை சேர்ந்த 4 இளைஞர்களை பிடித்து இரவோடு இரவாக நாமக்கல்லில் உள்ள விசாரணை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.

Tags:    

Similar News