உள்ளூர் செய்திகள்

நாமக்கல்லில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்ட காட்சி.

வருகிற 2024-ம் ஆண்டு தேர்தலில் மோடிக்கு உங்கள் முழு ஆதரவை தர வேண்டும்

Published On 2023-10-29 13:53 IST   |   Update On 2023-10-29 13:53:00 IST
  • தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை என் மண், என் மக்கள் என்கிற தலைப்பில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.
  • அந்த வகையில் நேற்று 88-வது சட்டசபை தொகுதியாக நாமக்கல்லில் நடைபயணம் மேற்கொண்டார்.

நாமக்கல்:

தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை என் மண், என் மக்கள் என்கிற தலைப்பில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்று 88-வது சட்டசபை தொகுதியாக நாமக்கல்லில் நடைபயணம் மேற்கொண்டார்.

நாமக்கல்லில் சேலம் சாலை 4 தியேட்டர் அருகில் தொடங்கிய நடைபயணம் பிரதான சாலை, பலப்பட்டறை மாரியம்மன் கோவில் வழியாக பஸ்நிலையம் சென்றது. இதில் மத்திய மந்திரி எல்.முருகன், அண்ணாமலை மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகள் ஊர்வலமாக வந்தனர். பின்னர் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பஸ்நிலையம் அருகே திறந்த வாகனத்தில் நின்றவாறு பேசினார்.

மந்திரவாதி

அப்போது அவர் பேசியதாவது:-

நாமக்கல்லில் பல இடங்களில் நீட் விலக்கு போஸ்டர் பார்த்தேன். தி.மு.க. எப்போதும் எந்த கதவை தட்ட வேண்டும் என்று தெரிந்தும், அந்த கதவை தட்ட மாட்டார்கள்.

உதாரணமாக கர்நாடக அரசு தண்ணீர் தரவில்லை என்றால், அந்த மாநிலத்துடன் பேச வேண்டும். ஆனால் அந்த மாநில முதல்-மந்திரிக்கு கடிதம் எழுதாமல், பிரதமர், ஜனாதிபதிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதுவார். ஆனால் எங்கே கதவு திறக்காதோ அங்கே போவார். அதேபோல நீட்டை பொறுத்தவரையில், உங்களுக்கு மத்திய அரசு எதிரி என்று நினைத்தால், சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்லுங்கள்.

நீட் வந்தபிறகு கிராமபுறத்தில் இருந்து ஏராளமான மாணவர்கள் அரசு மருத்துவக்கல்லூரிக்கு போகிறார்கள். ஆனால் தி.மு.க. நடத்தும் தனியார் கல்லூரிக்கு டொனேசன் வாங்க முடியவில்லை. உதயநிதி ஸ்டாலின் ஒரு முட்டையை தூக்கி செல்கிறார். முட்டை வைத்து மந்திரித்தால் நீட் காணாமல் போய் விடும் என்று முட்டை மந்திரவாதியாக செல்கிறார்.

வருகிற 2024-ம் ஆண்டு தேர்தலில் ஊழலற்ற ஆட்சி நடத்தும் மோடிக்கு உங்கள் முழு ஆதரவை தர வேண்டும். எந்த காரணத்தை கொண்டும், இந்தியா கூட்டணிக்கும், பொய் சொல்ல கூடிய முதல்-அமைச்சருக்கும், ஊழல் செய்யும் தி.மு.க. அரசுக்கும் வாய்ப்பு அளிக்க கூடாது.

பாதயாத்திரை செல்லும் இடம் எல்லாம் மக்கள் எழுச்சியோடு வருகிறார்கள். இதை பார்க்கும்போது, தமிழகத்தில் அரசியல் மாற்றம் வேண்டும் என்கிற எண்ணம் வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. நிச்சயமாக பா.ஜனதா அதை செய்து காட்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் பா.ஜ.க. மாநில துணை தலைவர்கள் டாக்டர் ராமலிங்கம், வி.பி. துரைசாமி, கிழக்கு மாவட்ட தலைவர் சத்யமூர்த்தி, மருத்துவ பிரிவு மாநில செயலாளர் டாக்டர் ஷியாம்சுந்தர், மாவட்ட பொது செயலாளர்கள் முத்துக்குமார், ரவி, சேதுராமன், மாவட்ட பொருளாளர் செந்தில்நாதன், ஆன்மீக பிரிவு மாவட்ட தலைவர் செல்வம், மாவட்ட செயலாளர் ராம்குமார், வக்கீல் பிரிவு மாவட்ட தலைவர் பிரபு, விவசாய அணி மாவட்ட தலைவர் செந்தில்வாசன், ஆன்மீக பிரிவு பிரவீன்குமார் உள்ளிட்ட பா.ஜ.க.வினர் நடை பயணத்தில் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News