உள்ளூர் செய்திகள்

பரமத்திவேலூர் அருகே தமிழகத்தின் மிகப் பெரிய 11 அடி சிவலிங்கம் கரும்பு தோட்டத்திற்குள் இருப்பதை படத்தில் காணலாம்.

தமிழகத்தின் மிகப் பெரிய 11 அடி சிவலிங்கத்தை இடமாற்றம் செய்ய சிவனடியார்கள் வலியுறுத்தல்

Published On 2023-11-08 12:42 IST   |   Update On 2023-11-08 12:44:00 IST
  • விவசாயி நடராஜ் (69) என்பவருக்கு சொந்தமான கரும்பு தோட்டத்தின் மையத்தில் கரும்பு காட்டில் 11 அடி உயரத்தில் சிவலிங்கம் கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் 15-ந்தேதி கண்டுபிடிக்கப்பட்டது.
  • தற்போது இந்த சிவலிங்கத்தை தினசரி பொதுமக்கள் மற்றும் சிவனடியார்கள் வந்து பூஜை செய்து வழிபட்டு செல்கின்றனர்.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலுார் தாலுகா கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம் சாணார்பாளையத்தை சேர்ந்த விவசாயி நடராஜ் (69) என்பவருக்கு சொந்தமான கரும்பு தோட்டத்தின் மையத்தில் கரும்பு காட்டில் 11 அடி உயரத்தில் சிவலிங்கம் கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் 15-ந்தேதி கண்டுபிடிக்கப்பட்டது.

வழிபாடு

நிலத்துக்கு மேல் 8 அடி உயரமும், அதன் அடியில் 3 அடி உயரமும் கொண்டு அமைந்துள்ளது. பிரம்ம சூத்திரக் குறியீட்டுடன் காவிரி கரையை பார்த்தவாறு கிழக்கு நோக்கி இருக்கிறது. தினமும் பக்தர்கள் மற்றும் சிவனடியார்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சிவனடியார்கள் நில உரிமையாளர் அனுமதி யுடன் சிவலிங்கத்தை எடுத்து வேறு இடத்தில் வைக்க முற்பட்டனர். வருவாய் துறையினர் சிவலிங்கத்தை வேறொரு இடத்துக்கு மாற்ற தடை போட்டுள்ளனர்.

தற்போது இந்த சிவலிங்கத்தை தினசரி பொதுமக்கள் மற்றும் சிவனடியார்கள் வந்து பூஜை செய்து வழிபட்டு செல்கின்றனர். பிரதோஷ நாட்களிலும் முக்கிய விசேஷ தினங்களிலும் அங்கு பூஜை செய்யப்பட்டு வருகிறது.

6-ம் நூற்றாண்டு

இது குறித்து சிவனடியார்கள் கூறியதாவது:-

முற்காலத்தில் இவ்விடத்தில் மிகப்பெரிய சிவாலயம் இருந்திருக்க வேண்டும். லிங்கத்தின் அமைப்பு மற்றும் பிரம்ம சூத்திர குறியீடை வைத்து பார்க்கும்போது, 6-ம் நுாற்றாண்டுக்கு முற்பட்ட சிவலிங்கமாக தொல்லியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இந்த சிவலிங்கம் ஆந்திர மாநிலம் குடிமல்லம் பழமையான லிங்கத்தை போன்றே உள்ளது. லிங்கத்தின் மேற்பகுதி தட்டையாக உள்ளது. அதனால் இது பல்லவர் காலத்து சிவலிங்கமாக இருக்க வாய்ப்புள்ளது. கரும்பு காட்டிற்குள் இருப்பதால் விளக்கு ஏற்றி வழிபடும்போது தீ விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் பாதுகாப்பான வேறு ஒரு இடத்திற்கு மாற்ற வேண்டும்.

கடந்த ஒரு வருடமாக வருவாய்த் துறையினர் அனுமதி தரவில்லை. எனவே சிவலிங்கத்தை இடமாற்றம் செய்ய அனுமதி தர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் ரேவதி தெரிவிக்கையில் சிவலிங்கத்தை இடமாற்றம் செய்வதற்கு பக்தர்களின் கோரிக்கையை பரிசீலித்து உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. சிவலிங்கத்தை இடமாற்றம் செய்ய இன்னும் அனுமதி கிடைக்கவில்லை. அனுமதி பெற்ற பிறகு தான் மாற்ற முடியும் என்றார்.

Tags:    

Similar News