வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள், ரொக்க பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்- போலீஸ் வலை வீச்சு
- ஏழு சவரன் தங்க நகைகளையும், மூன்று ஜோடி வெள்ளி கொலுசுகளையும் திருடி சென்றதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
- கொள்ளை சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், குருவாயல் ஊராட்சி, ஆரிக்கம்பேடு கிராமம், பெருமாள் கோவில் தெருவில் வசித்து வருபவர் மாரியம்மாள்(வயது50). கணவனை இழந்த இவர் பூச்செடிகள் பயிர் செய்து வருகிறார். இந்நிலையில், இவரது உறவினர் வீட்டு திருமணத்திற்காக மாரியம்மாள் வீட்டை பூட்டிக் கொண்டு கடந்த புதன்கிழமை காவனூர் கிராமத்திற்கு சென்றிருந்தார். இந்நிலையில், உறவினர் வீட்டு திருமணம் முடிந்த பின்னர் நேற்று மாலை வீடு திரும்பினார்.
அப்போது அவருக்கு அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது. வீட்டின் பூட்டை உடைத்துக் கொண்டு உள்ளே சென்ற மர்ம நபர்கள் பீரோவில் இருந்த ரொக்க பணம் ரூ.ஒரு லட்சத்து 8 ஆயிரம், தங்க சங்கிலி, டாலர், கம்மல் உள்ளிட்ட ஏழு சவரன் தங்க நகைகளையும், மூன்று ஜோடி வெள்ளி கொலுசுகளையும் திருடி சென்றதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இந்த கொள்ளை சம்பவம் குறித்து மாரியம்மாள் நேற்று இரவு வெங்கல் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த கொள்ளை சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.