முல்லை பெரியாறு அணையில் கூடுதல் தண்ணீர் திறப்பால் லோயர் கேம்ப்பில் 168 மெகாவாட் மின்உற்பத்தி
- அணையின் நீர்மட்டம் 132.40 அடியாக உள்ளது.
- பெரியாறு அணை 5.2, தேக்கடி 4.2 மி.மீ. மழையளவு பதிவாகி உள்ளது.
கூடலூர்:
தேனி மாவட்டம் கூடலூர் அருகே லோயர் கேம்ப்பில் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் நீர்மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு அதிகபட்சமாக 4 ஜெனரேட்டர்கள் மூலம் தலா 42 மெகாவாட் என 168 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்படுகிறது.
முல்லை பெரியாறு அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் 4 ராட்சத குழாய் மூலம் லோயர் கேம்ப் மின்உற்பத்தி நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு ஜெனரேட்டர்கள் மூலம் மின்உற்பத்தி செய்யப்படுகிறது. நீர் வரத்தை பொறுத்து செய்யப்பட்டு வருகிறது. கடந்த மார்ச் மாதம் அணையின் நீர்மட்டம் 114 அடியாக சரிந்ததால் குடிநீருக்காக மட்டும் 100 கனஅடி நீர் திறந்து விடப்பட்டது. இதனால் நீர் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது.
பருவமழை கைகொடுத்ததால் அணையின் நீர்மட்டம் 130 அடியை தாண்டியது. வழக்கம் போல் ஜூன் 1ம் தேதி கம்பம் பள்ளத்தாக்கு முதல்போக சாகுபடி மற்றும் குடிநீருக்காக கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. இன்று காலை நிலவரப்படி அணையில் இருந்து 1844 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. இதனால் 4 ஜெனரேட்டர்கள் மூலம் 168 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்படுகிறது. அணைக்கு 1713 கனஅடி நீர் வருகிறது. அணையின் நீர்மட்டம் 132.40 அடியாக உள்ளது. 5259 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.
71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 62.95 அடியாக உள்ளது. 1484 கனஅடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 969 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. 4191 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 41.05 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை.
சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 82 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கனஅடி திறக்கப்படுகிறது.
சண்முகாநதி அணையின் நீர்மட்டம் 46.40 அடியாக உள்ளது. 3 கனஅடி நீர் வருகிறது. திறப்பு இல்லை.
பெரியாறு அணை 5.2, தேக்கடி 4.2 மி.மீ. மழையளவு பதிவாகி உள்ளது.