உள்ளூர் செய்திகள்

எம்.பி கனிமொழி

ஆளுநர் பதவி என்பதே தேவையில்லாத ஒன்றுதான் - கனிமொழி எம்.பி

Published On 2022-11-28 12:58 GMT   |   Update On 2022-11-28 12:58 GMT
  • ஆன்லைன் ரம்மி தடைச்சட்டத்துக்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை.
  • ஆன்லைன் ரம்மியைப் பாதுகாக்க ஏன் இவ்வளவு துடிக்கிறார்கள் என்று தெரியவில்லை என கனிமொழி எம்.பி தெரிவித்தார்.

தூத்துக்குடி:

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் அவசர சட்டத்தை இயற்றி தமிழக அரசு கடந்த மாதம் 1-ம் தேதி கவர்னர் அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தது. இதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அன்றைய தினமே பரிசீலித்து உடனடியாக ஒப்புதல் அளித்தார். அவசர சட்டத்துக்கு மாற்றாக நிரந்தர சட்ட மசோதா கடந்த அக்டோபர் 19-ம் தேதி தமிழக சட்டசபையில் தாக்கல் செய்து குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

அதன்பின், ஆளுநரின் ஒப்புதலுக்காக கடந்த மாதம் 28-ம் தேதி அனுப்பி வைக்கப்பட்டது. ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தடை மசோதாவுக்கு விளக்கம் கேட்டு கடந்த 24-ம் தேதி தமிழக அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கடிதம் எழுதினார். அவர் கேட்டுள்ள விளங்கங்களுக்கு 24 மணி நேரத்திற்குள் அரசு பதில் அளித்தது. எனினும் இந்த மசோதாவுக்கு ஆளுநர் இன்னும் ஒப்புதல் அளிக்காததால் காலாவதி ஆகிவிட்டது.

இந்நிலையில், தி.மு.க. எம்.பி கனிமொழி கூறுகையில், ஆளுநர் பதவியே தேவையில்லாத ஒன்றுதான். அது காலாவதியான பதவிதான். ஆன்லைன் ரம்மி தடைச்சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காத நிலையில் அந்த மசோதா காலாவதியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆன்லைன் ரம்மியைப் பாதுகாக்க ஏன் இவ்வளவு துடிக்கிறார்கள் என்று தெரியவில்லை என்றார்.

Tags:    

Similar News