உள்ளூர் செய்திகள்

டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி எடுக்க தமிழ்நாடு அரசு அனுமதிக்காது- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

Published On 2023-04-04 07:00 GMT   |   Update On 2023-04-04 07:37 GMT
  • திருவாரூர் மாவட்டத்தில் விளையாட்டு கட்டமைப்புகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
  • தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகாவில் மத்திய அரசு 11 இடங்களில் நிலக்கரி எடுக்க உள்ளதாக தகவல் வந்துள்ளது.

திருவாரூர்:

திருவாரூரில் இன்று தி.மு.க. மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா நடைபெற்றது. இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பொற்கிழி வழங்கினார்.

பின்னர் அவர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற துறை சார்ந்த ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-

திருவாரூர் மாவட்டத்தில் விளையாட்டு கட்டமைப்புகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பல்வேறு நல்ல திட்டங்களை திருவாரூர் மாவட்டத்தில் செயல்படுத்தி உள்ளது. இன்னும் பல்வேறு திட்டங்கள் வர உள்ளன.

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகாவில் மத்திய அரசு 11 இடங்களில் நிலக்கரி எடுக்க உள்ளதாக தகவல் வந்துள்ளது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக டெல்டா மாவட்டம் விளங்குகிறது. இதனால் ஒருபோதும் தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பழுப்பு நிலக்கரி எடுக்க தமிழ்நாடு அரசு அனுமதி கொடுக்காது. இதனை உறுதியாக கூறுகிறேன்.

எனவே விவசாயிகள் அச்சமடைய வேண்டாம். இது தொடர்பாக நாளை சட்டபேரவையில் பேச உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News