உள்ளூர் செய்திகள்

நீலகிரி, தர்மபுரி மாவட்டங்களில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு 2 கிலோ கேழ்வரகு- அமைச்சர் சக்கரபாணி

Published On 2023-04-29 03:36 GMT   |   Update On 2023-04-29 03:36 GMT
  • உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தொடங்கி வைத்தார்.
  • நீலகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் தலா 2 கிலோ கேழ்வரகு வருகிற மே மாதம் முதல் வழங்கப்படும்.

சென்னை:

தேசிய பல்லுயிர் பெருக்க ஆணையம் மற்றும் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை ஆகியவை இணைந்து மாணவர்கள், விவசாயிகள் இடையே சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கைமுறை தொடர்பாகவும், சிறுதானியங்கள் மற்றும் வீட்டு தோட்டம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியை சென்னை தரமணியில் உள்ள எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையில் நேற்று நடத்தியது. இதனை, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தொடங்கி வைத்தார்.

இதையடுத்து, அவர் பேசும்போது, "தமிழ்நாட்டில் பொது வினியோக திட்டத்தின் கீழ் நீலகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் (ரேஷன் கார்டு) தலா 2 கிலோ கேழ்வரகு வருகிற மே மாதம் முதல் வழங்கப்படும். சிறுதானிய வளர்ச்சிக்கு தமிழ்நாடு அரசு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. இன்றைய நிகழ்வின் நோக்கம் வெற்றிகரமாக நிறைவேறி வீட்டு தோட்டங்கள் வளர்த்து, சிறுதானியங்களின் விளைச்சல் பெருகி அதனை உட்கொண்டு ஆரோக்கியமான வளமான, நலமான, வலிமையான தமிழ்நாட்டையும், இந்தியாவையும் உருவாக்கிடுவோம்" என்றார்.

தேசிய பல்லுயிர் பெருக்க ஆணையத்தின் தலைவர் (சென்னை) அச்சலேந்தர் ரெட்டி, எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் சவுமியா சுவாமிநாதன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News