உள்ளூர் செய்திகள்

(கோப்பு படம்)

மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்காக மனநலன் காக்கும் திட்டம்- அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

Published On 2022-09-12 11:46 GMT   |   Update On 2022-09-12 11:46 GMT
  • உளவியல் ஆலோசனை தேவைப்படும் மாணவர்களுக்கு அலைபேசி உதவி எண்.
  • மன நலன் காக்கும் மனம் திட்டம் அனைத்து கல்லூரிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.

அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் மாணவர்களுக்கான மன நலன் காக்கும் மனம் திட்டத்தினை சென்னை, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று தொடங்கி வைத்தார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: பொதுவாக மனிதர்கள் உடல்நலத்தை பேணுவதில் மிகுந்த கவனம் எடுத்துக் கொள்கின்றனர். ஆனால், மனநலத்தை பெரிதாக பொருட்படுத்துவதில்லை என்று சொல்லலாம். உடலும் மனமும் நலமாக இருந்தால்தான் வெற்றிகரமான ஆக்கப்பூர்வமான வாழ்வை நாம் வாழ முடியும்.

கல்லூரி மாணவர்களை பொருத்தவரை கல்வி மற்றும் வாழ்க்கை சார்ந்த பல்வேறு சவால்களை சந்திக்கிறார்கள். பெரும்பாலானவர்கள் அச்சவால்களை எதிர்கொண்டு சமாளித்து வெற்றி பெறுகின்றனர். சிலருக்கு அவர்கள் சந்திக்கும் சவால்கள் மற்றும் நெருக்கடியை எதிர்கொள்ளும் போது எதிர்மறை எண்ணங்கள் தோன்றலாம். இந்த வகையில் அனைத்து மருத்துவக் கல்லூரி மாணவர்களின் மனநலத்தை, அறிவியல் அடிப்படையில் பாதுகாப்பதும், மேம்படுத்துவதும், கூடுதலான நற்பலன்களை தரும். ​

எனவே, இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகள், பல் மருத்துவக் கல்லூரிகள், துணை மருத்துவக் கல்லூரிகளிலும் 'மனம்' என்ற பெயரில் மருத்துவ மாணவர்களின் மனநலன் காக்கும் சிறப்புத் திட்டம் துவங்கப்பட்டு 'மனநல நல்லாதரவு மன்றங்கள்' அமைக்கப்பட்டுள்ளது. ​

இந்த மனநல நல்லாதரவு மன்றங்களில் மருத்துவக் கல்லூரி முதல்வர், மனநலத்துறை தலைவர் உள்ளிட்ட அனைத்து துறைத் தலைவர்கள், உதவி பேராசிரியர்கள், மற்றும் அனைத்து வருட மாணவ-மாணவிகள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு கல்லூரி மாணவர்களின் மனநலனை மேம்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

​இத்திட்டத்தில் தன்னார்வ அடிப்படையில் மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் மனநல நல்லாதரவு மன்றங்களின் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டு அவர்களுக்கு மனநலம் பேணும் வகையிலும் மனநல மேம்பாட்டிற்கான பயிற்சிகள் வழங்கப்படும். பின்னர் இத்தகைய ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கொண்ட மனநல தூதுவர்கள் மூலமாக கல்லூரிகளிலுள்ள இதர ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும்.

கூடுதலாக, மாணவர்களின் நலவாழ்விற்கான வாழ்வியல் நெறிமுறைகள் பற்றிய புத்தாக்க பயிற்சிகள் வழங்கப்படுவதுடன் மாணவர்களின் கலைத்திறன், கற்பனைத்திறன் உள்ளிட்ட அனைத்துவகை தனித்திறன்களை கண்டறிந்து, தனித்திறன் மேம்பாட்டிற்கான வழி வாய்ப்புகள் உருவாக்கப்படும்.

​உளவியல் ஆலோசனை தேவைப்படும் மாணவர்கள் தயக்கமின்றி, உடனடியாக மனநல மருத்துவரை தொடர்பு கொள்ளும் வகையில் அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் 'மனம்' அலைபேசி உதவி எண் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.இத்திட்டம் முதல் கட்டமாக மருத்துவக்கல்லூரிகளில் தொடங்கப்பட்டு பின்னர் அனைத்து கல்லூரிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.

மனநல பிரச்சனைகள் வராமல் தடுப்பதும் மாணவர்களின் மனநல மேம்பாட்டினை உறுதி செய்து நிறைவான மாணவ பருவத்தை வாழ்ந்திட மாணவர்களை தயார்படுத்துவதே இதன் நோக்கமாகும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News