உள்ளூர் செய்திகள்

அம்மா உணவகத்தை மூடும் எண்ணம் இல்லை- அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்

Published On 2023-03-31 03:45 GMT   |   Update On 2023-03-31 03:45 GMT
  • அ.தி.மு.க. ஆட்சியில் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது அம்மா உணவகம் கொண்டு வரப்பட்டது.
  • ஒரு நாள் கூட அம்மா உணவகத்தை நிறுத்த எண்ணவில்லை.

சென்னை:

சட்டசபையில் அ.தி.மு.க. உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி (தொண்டாமுத்தூர்) பேசினார். அப்போது நடைபெற்ற விவாதம் வருமாறு:-

உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி:- அ.தி.மு.க. ஆட்சியில் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது அம்மா உணவகம் கொண்டு வரப்பட்டது. இது இந்தியாவில் அதிக மாநிலங்களில் வரவேற்பை பெற்றது. ஆனால் 2021-ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு அம்மா உணவகத்தை நிறுத்தும் வகையில் கலைஞர் உணவகம் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. கடந்த 3 பட்ஜெட்டுகளில் இந்த திட்டத்துக்கு நிதி ஒதுக்கப்படவில்லை.

அமைச்சர் கே.என்.நேரு:- ஒரு நாள் கூட அம்மா உணவகத்தை நிறுத்த எண்ணவில்லை. அம்மா உணவகத்தில் ஒரு கடையில் ரூ.4 ஆயிரம் வருமானம் வருகிறதென்றால், ரூ.6 ஆயிரம் சம்பளம் கொடுக்க வேண்டிய நிலை உள்ளது. எனவேதான் சீர்செய்ய, பணியாளர்களை மாற்றி மாற்றி வேலை கொடுக்கிறோம். அனைத்து இடத்திலும் உணவு வழங்கப்பட்டு வருகிறது. அம்மா உணவகத்தை மூட முதலமைச்சர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி:- பல்வேறு அம்மா உணவகத்தில் இருந்து எங்களுக்கு புகார் வந்து கொண்டிருக்கிறது. அங்கு தரமான உணவுப்பொருள் வழங்கப்படுவதில்லை. அதனால் ருசியான உணவு கிடைக்காததால், வாடிக்கையாளர்கள் குறைந்து வருகிறார்கள். அங்கு அரசு தரமான பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்:- எதிர்க்கட்சி தலைவர், ஆதாரத்தோடு சொன்னால் நிச்சயமாக, உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும். எங்கேயாவது தவறு நடக்கலாம், நான் இல்லை என்று மறுக்கவில்லை. எந்த இடத்தில் குறைபாடு இருக்கிறது என்று சொன்னால் அதற்குரிய நடவடிக்கையை இந்த அரசு நிச்சயமாக எடுக்கும்.

உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி:- அம்மா உணவகத்தை சிறப்பாக செயல்படுத்த அ.தி.மு.க. அரசு ரூ.100 கோடி நிதியை ஒதுக்கியது. கடந்த 2 ஆண்டுகால தி.மு.க. ஆட்சியில் நிதி ஒதுக்கப்படவில்லை.

அமைச்சர் கே.என்.நேரு:- மாநகராட்சி மூலம்தான் அம்மா உணவகம் நடத்தப்பட்டு வருகிறது. அம்மா உணவகத்துக்கு சென்னை மாநகராட்சி மூலம் இந்த ஆண்டு ரூ.129 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் வருவாய் என்பது ரூ.15 கோடியாகத்தான் இருக்கிறது.

இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

Tags:    

Similar News