உள்ளூர் செய்திகள்

அஞ்செட்டியில் சிறுதானியங்கள் உணவு சமையல் போட்டி

Published On 2023-08-10 16:16 IST   |   Update On 2023-08-10 16:16:00 IST
  • முருங்கை கீரை, மொடக்கத்தான் கீரை கலந்த சிறுதானிய ரொட்டிகள் போன்ற பல்வேறு புதுமையான உணவு வகைகளை காட்சிப்படுத்தினர்.
  • பரிந்துரைக்கப்பட்ட வழிகாட்டுதல்களுடன் நிபுணர்கள் குழுவால் வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி அடுத்த எலுமிச்சங்கிரியில் உள்ள வேளாண்மை அறிவியல் மையத்தால் 2023-ம் ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டைக் கொண்டாடவும், சிறுதானிய உற்பத்தி மற்றும் உற்பத்தி திறனை அதிகரிப்பதற்காகவும் வாழ்க்கை முறை பகுதி விரிவாக்கத்தில் சிறுதானியங்களின் ஆரோக்கிய நன்மைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் சிறுதானியங்கள் உணவுப் போட்டி அஞ்செட்டி கிராமத்தில் நடத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகத்தின் உதவிப் பொது இயக்குநர் ரஞ்சய் குமார் சிங் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார்.

இதில் ஐதராபாத் பத்தாவது மண்டலத்தின் வேளாண் தொழில்நுட்ப பயன்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் ஷேக் என்.மீரா, கவுகாத்தி ஆறாவது மண்டலத்தின் வேளாண் தொழில்நுட்ப பயன்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் கதிர்வேல் கோவிந்தசாமி, கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண் விரிவாக்க கல்வி இயக்குநர் முருகன், கிருஷ்ணகிரி மாவட்டட வேளாண்மை இணை இயக்குனர் கிருஷ்ணன் உள்பட பலர் பேசினார்கள்.

நிகழ்ச்சியில் நடந்த சிறுதானிய உணவுப் போட்டியில், அஞ்செட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 80 போட்டியாளர்கள் கலந்துகொண்டு, போட்டிக்கான சிறுதானியங்கள் சார்ந்த உணவுப் பொருட்களான ராகி பர்ப்பி, சிறுதானிய அல்வா, லட்டு, ராகி பூரி, களி மற்றும் முருங்கை கீரை, மொடக்கத்தான் கீரை கலந்த சிறுதானிய ரொட்டிகள் போன்ற பல்வேறு புதுமையான உணவு வகைகளை காட்சிப்படுத்தினர்.

பரிந்துரைக்கப்பட்ட வழிகாட்டுதல்களுடன் நிபுணர்கள் குழுவால் வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் ஐதராபாத் பத்தாவது மண்டல வேளாண்மை தொழிற்நுட்ப பயன்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானி பிரசாத், முதுநிலை விஞ்ஞானி மாலதி, தருமபுரி மாவட்ட வேளாண்மை அறிவியல் மையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் வெண்ணிலா, கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் திட்ட அலுவலர் ஜெயந்தி, மருத்துவ அலுவலர் டாக்டர். ரஞ்சித், ஊராட்சி மன்ற தலைவர் பாஸ்கரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முன்னதாக கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண்மை அறிவியல் மையத்தின் முதுநிலை விஞ்ஞானியும், தலைவருமான சுந்தர்ராஜ் வரவேற்றார். முடிவில் மனையியல் தொழில்நுட்பட வல்லுநர் பூமதி நன்றி கூறினார்.

Tags:    

Similar News