உள்ளூர் செய்திகள்

கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் இந்து மக்கள் கட்சியினர் வாயில் கருப்பு துணி கட்டி நூதன முறையில் மனு கொடுக்க வந்த போது எடுத்த படம்.

கடலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வாயில் கருப்பு துணி கட்டி வந்த இந்து மக்கள் கட்சியினர்

Published On 2023-09-25 10:24 GMT   |   Update On 2023-09-25 10:24 GMT
  • கலெக்டர் அலுவலகத்திற்கு வாயில் கருப்பு துணி கட்டியபடி வந்தனர்.
  • ஆலய நிலங்கள் சட்டத்திற்கு புறம்பாகவும், சட்டவிரோதமாகவும் விற்கப்பட்டுள்ளது.

கடலூர்:

இந்து மக்கள் கட்சி கடலூர் மாவட்ட தலைவர் தேவா தலைமையில் பொதுச் செயலாளர் சக்திவேல், அமைப்பு பொதுச் செயலாளர் ஜம்புலிங்கம், கடலூர் ஒன்றிய தலைவர் ஜெகநாதன், மாவட்ட செயலாளர் கார்த்திக் உள்ளிட்டோர் இன்று காலை கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வாயில் கருப்பு துணி கட்டியபடி வந்தனர்.

பின்னர் அவர்கள் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரனிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-  பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான ஆறுகால கட்டளை பூஜைகளில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள், பல ஏக்கர் விவசாய நிலங்கள் கணக்கில் இருக்கின்றதா? இல்லையா? என உண்மை தன்மையை கண்டறிந்து சொத்துக்களை மீட்க உயர்மட்ட விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும். ஆலய கட்டளை மற்றும் ஆலய நிலங்கள் சட்டத்திற்கு புறம்பாகவும், சட்டவிரோதமாகவும் விற்கப்பட்டுள்ளது.

அதன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவிலின் உள்ளே செயல் அலுவலர் அலுவலகம் செயல்படுவதால் பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை கோவில் நடை சாத்தப்படுவதால் வெளியூரிலிருந்து வருவோருக்கு திருமண பதிவு சான்றிதழ் பெறுவதற்கு மிகவும் சிரமமாக உள்ளது. அதனால் அலுவலகத்தை கோவிலின் வெளிப்புறம் அமைக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்து மக்கள் கட்சியினர் கலெக்டர் அலுவலகத்திற்கு வாயில் கருப்பு துணி கட்டி மனு அளிக்க வந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News