மனிதசங்கிலி போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவ மாணவர்கள்.
மருத்துவ மாணவா்கள் மனித சங்கிலி போராட்டம்
- டாக்டர் சுகிா்தாவுக்கு நீதி வழங்க வேண்டும்.
- குற்றவாளிகள் மீது சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தஞ்சாவூர்:
அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் விஷாகா குழுக்களை அமைக்கக் கோரி தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் மருத்துவ மாணவா்கள் மனித சங்கிலிப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பயிற்சி மருத்துவர்கள் குமாரசாமி,கீர்த்தனா, மதுமிதா ஆகியோர் தலைமை தாங்கினர்.
இதில் தமிழ்நாடு மருத்துவ மாணவா்கள் சங்கம், சமூக சமத்துவத்துக்கான டாக்டா்கள் சங்கம் சாா்பில் நடைபெற்ற போராட்டத்தில், பாலியல் வன்முறை, கூடுதல் வேலை நேரம், கடும் உழைப்பு சுரண்டல், பகடி வதை உள்ளிட்ட காரணங்களால் தற்கொலைக்கு தள்ளப்பட்ட மருத்துவா் சுகிா்தாவுக்கு நீதி வழங்க வேண்டும்.
குற்றவாளிகள் மீது சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் விஷாகா குழுக்களை அமைக்க வேண்டும். இளநிலை, முதுநிலை மாணவா்களுக்கு தொடா்ச்சியாக 8 மணி நேரத்துக்கும் மேல் பணி வழங்கக் கூடாது.
இளநிலை, முதுநிலை மாணவா்களுக்கு தேசிய மருத்துவ கவுன்சில் விதிமுறைகளுக்கு புறம்பான, அதில் குறிப்பிடப்படாத வேலைகளை வழங்கக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதில், ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.