பிரதமர் மோடியை எதிர்த்து மே 17 இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்: திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் கைது
- காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
- புதிய வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.
மதுரை:
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் புதிதாக கட்டப்பட்டுள்ள புதிய ரெியல் பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்துவைத்தார். இதற்காக அவர் இலங்கையில் இருந்து ஹெலிகாப்டரில் மண்டபம் வந்தார்.
இதற்கிடையே பிரதமரின் தமிழகம் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்தநிலையில் மதுரை பெரியார் பஸ் நிலையம் கட்டபொம்மன் சிலை அருகே பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மே 17 இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மே 17 இயக்க தலைவர் திருமுருகன் காந்தி தலைமை தாங்கினார்.
இதில் அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக்கழக தலைவர் பசும்பொன் பாண்டியன், விடுதலை தமிழ்ப்புலிகள் அமைப்பு தலைவர் குடந்தை அரசன், தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மாநில செயலாளர் இஸ்மாயில் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோர் மோடிக்கு எதிராகவும், மத்திய பா.ஜ.க. அரசையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் மோடி வருகையை கண்டித்து மதுரை மாவட்டம் திருமங்கலம் ராஜாஜி சிலை அருகே காங்கிரஸ் கட்சியினர் கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் அம்மாபட்டி பாண்டி தலைமையில் 50-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கையில் கருப்பு கொடியுடன் பிரதமர் மோடியை கண்டித்தும், புதிய வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் ராமசாமி, பழனிக்குமார் வட்டார தலைவர்கள் ஜெயராஜ், வேல்முருகன், செல்வராஜ், செந்தில், நகரத் தலைவர் சவுந்தர், எஸ்.சி., எஸ்.டி. மாவட்ட தலைவர் ராஜா தேசிங்கு மற்றும் நிர்வாகிகள் மனோகரன், பாலகிருஷ்ணன், முனியசாமி போஸ் உள்பட பலர் பங்கேற்றனர்.