கப்பலூர் சுங்கச்சாவடி போராட்டக்குழுவினர் கோட்டாட்சியர் அபிநயாவிடம் மனு அளித்தனர்.
திருமங்கலம்-கப்பலூர் வாகனங்களுக்கு சுங்க கட்டண விலக்கு தொடரும்
- கலெக்டரின் மறுஉத்தரவு வரும்வரை திருமங்கலம்-கப்பலூர் வாகனங்களுக்கு சுங்க கட்டண விலக்கு தொடரும்.
- வருகிற 2-ந் தேதி கலந்து ஆலோசித்து போராட்டம் தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்படும் என கோட்டாட்சியர் தெரிவித்தனர்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் கப்பலூர் சுங்க சாவடியை அகற்ற கடந்த வாரம் திருமங்கலம் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர். இதுதொடர்பாக அமைச்சர் மற்றும் கலெக்டர் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது.ஆனால் எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை. இந்த நிலையில் கோட்டாட்சியர் அபிநயா தலைமையில் கப்பலூர் போராட்ட எதிர்ப்பு குழு மற்றும் சுங்கச்சாவடி நிர்வாகத்தை அழைத்து சமரச கூட்டம் நடந்தது.
கூட்டத்தின் முடிவில் கோட்டாட்சியர் அபிநயா, இந்த கூட்டம் தொடர்பாக மாவட்ட கலெக்டரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும். மாவட்ட கலெக்டர் உத்தரவுக்கு பின் அடுத்த கட்ட நடவடிக்கை தொடரும். அதுவரையில் திருமங்கலம், கப்பலூர் வாகனங்களுக்கு கட்டண விலக்கு நடைமுறை தொடரும் என்றார்.
பேச்சுவார்த்தைக்கு பின் பேராட்டக்குழுவினர் நிருப ர்களிடம் கூறுகையில், திருமங்கலம், கல்லுப்பட்டி, பேரையூர் உட்பட தென்காசி - திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையை பயன்படுத்தக்கூடிய வாகனங்கள் அனைத்திற்கும் கட்டண விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளதாகவும், சுங்கச்சாவடி விவகாரம் தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து வருகிற 2-ந் தேதி கலந்து ஆலோசித்து போராட்டம் தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிவித்தனர்.
கூட்டத்தில் திருமங்கலம் வட்டாட்சியர் சிவராமன், டி.எஸ்.பி. வசந்தகுமார், திருமங்கலம் நகராட்சி கமிஷனர் பேலன்ஸ் லியோன், நகர்மன்ற தலைவர் ரம்யா முத்துக்குமார், தி.மு.க. நகர செயலாளர் ஸ்ரீதர் உட்பட பலர் இருந்தனர்.