உள்ளூர் செய்திகள்

செல்போன் செயலிகள் மூலம் பணத்தை பறிகொடுத்தவர்கள் புகார் செய்யலாம்

Published On 2022-08-28 14:33 IST   |   Update On 2022-08-28 14:33:00 IST
  • செல்போன் செயலிகள் மூலம் பணத்தை பறிகொடுத்தவர்கள் 24 மணி நேரமும் புகார் செய்யலாம் என மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார்.
  • எனிடெஸ்க், டீம் வியுவர் போன்ற செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம்.

மதுரை

மதுரை மாவட்டத்தில் கடந்த 1 மாதத்தில் மட்டும் சைபர்கிரைம் போலீசார் ரூ.7.10 லட்சம் மதிப்பு உடைய 50 மொபைல் போன்களை கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.

மதுரை மாவட்டத்தில் இதுவரை ரூ.1.16 கோடி மதிப்பு உடைய 827 மொபைல் போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. தொலைந்து போன செல்போன்களை உரிமையாளர்களிடம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் வழங்கினார். மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வங்கிகளில் இருந்து பேசுவதாக கூறி பொதுமக்களின் வங்கி விபரங்களை தெரிந்து கொண்டு நூதன முறையில் நடந்த திருட்டு வழக்குகளில், இதுவரை ரூ.32 லட்சம், பாதிக்கப்பட்டோரின் வங்கிக்கணக்கில் திரும்ப செலுத்தப்பட்டு உள்ளது.

வங்கியில் இருந்து பேசுவதாக கூறி ஏமாற்றுவோரிடம் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். முன்பின் தெரியாதவர்களிடம் வங்கிகணக்கு எண், சி.வி.வி. மற்றும் ஒ.டி.பி. போன்ற விபரங்களை கொடுத்து ஏமாற வேண்டாம். வேலைவாய்ப்பு செயலிகள், முதலீட்டு மென்பொருட்கள் ஆகியவை தரும் வாக்குறுதியை நம்பி முன்பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்.

அதிக வட்டி தரும் ஆன்லைன் கடன் செயலிகளிடம் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும். வங்கிகளில் இருந்து வரும் வீடியோகாலை ஏற்க வேண்டாம். செல்போனில் அப்டேட் செய்யும்படி வரும் லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம்.

தொலைதூரங்களில் இருந்து இயக்கப்படும் எனிடெஸ்க், டீம் வியுவர் போன்ற செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம். யாரேனும் மேற்கண்ட வகையில் பணம் இழக்க நேர்ந்தால் 1930 என்ற இலவச போன் நம்பருக்கும், https://www.cybercrime.gov.in இணையதள முகவரியிலும் 24 மணிநேரமும் புகார் அளிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News