உள்ளூர் செய்திகள்

வீரவசந்தராயர் மண்டபத்தை சீரமைக்கும் பணி

Published On 2023-03-27 08:56 GMT   |   Update On 2023-03-27 08:56 GMT
  • வீரவசந்தராயர் மண்டபத்தை சீரமைக்கும் பணி பூமிபூஜையுடன் இன்று தொடங்கியது
  • தற்போது அந்த சிற்ப கல் தூண்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளன.

மதுரை

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் ராஜகோபுர பகுதியில் வீர வசந்தராயர் மண்டபம் அமைந்து உள்ளது. இங்கு கடந்த 2018-ம் ஆண்டு தீ விபத்து ஏற்பட்டது. இதில் வீர வசந்தராயர் மண்டபம் முற்றிலும் கருகி சேதம் அடைந்தது.

இதனைத் தொடர்ந்து தமிழக சிற்ப கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்களின் உதவியுடன் மண்டபத்தை பாரம்பரிய முறைப்படி புனரமைப்பது என்று தமிழ்நாடு அரசு முடிவு செய்தது. இதற்காக அரசு 18.10 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து இருந்தது.

இந்த நிலையில் வீர வசந்தராயர் மண்டபத்தை சீரமைப்பதற்காக நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் கல்குவாரியில் இருந்து கற்கள் வெட்டி எடுக்கப் பட்டு, மதுரைக்கு கொண்டு வரப்பட்டது.

அந்த பிரம்மாண்ட கற்கள், மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான செங்குளம் கிராமத்தில் பத்திரமாக பாதுகாக்கப் பட்டன. அங்கு குவாரி கற்களை, சிற்பத் தூணாக மாற்றும் பணி மும்முரமாக நடந்து வந்தது. தற்போது அந்த சிற்ப கல் தூண்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளன. இதன் ஒரு பகுதியாக முதல் சிற்பத் தூண் நிர்மாணிக்கும் பணி, இன்று காலை நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் அனீஷ் சேகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பூமி பூஜை நடத்தி மறுசீரமைப்பு பணிகளை தொடங்கி வைத்தார். அதன் பிறகு அங்கு மறுசீரமைப்பு பணிகள் மும்முரமாக தொடங்கி நடந்து வருகிறது. வீர வசந்தராயர் மண்டபத்தில் ஒட்டு மொத்தமாக 40 தூண்கள் நிர்மாணிக்கப்பட உள்ளன. இதற்கான வேலைகள் படிப்படியாக தொடங்கி நடந்து வருகிறது.

வீர வசந்த ராயர் மண்டப பூமிபூஜையின் போது கோவில் தக்கார் கருமுத்து கண்ணன், மீனாட்சி அம்மன் கோயில் அதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News