உள்ளூர் செய்திகள்

கண்காணிப்பு காமிரா இல்லாத கோவில்களை குறிவைத்து அடுத்தடுத்து உண்டியலை உடைத்து பணம் திருட்டு

Published On 2023-11-23 08:33 GMT   |   Update On 2023-11-23 08:33 GMT
  • வாடிப்பட்டி அருகே கண்காணிப்பு காமிரா இல்லாத கோவில்களை குறிவைத்து அடுத்தடுத்து உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்டது.
  • இந்த சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் வெவ்வேறு கும்பலா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாடிப்பட்டி

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே குலசேகரன்கோட்டை கிராமம் உள்ளது. இங்கு பாண்டிய மன்னரால் கட்டப்பட்டதாக கருதப்படும் பழமையான மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் உள்ளது. இந்த கோவில் கொடி மரம் அருகே 3 அடி உயர உண்டியல் வைக்கப் பட்டுள்ளது.

நேற்று இரவு பணியாளர்கள் பூஜைகள் முடிந்ததும் பூசாரி, பணியாளர்கள் கோவிலை பூட்டி விட்டு சென்றனர். இன்று காலை மீண்டும் கோவிலை திறந்த போது வாயிலின் முன்புறமுள்ள கொடிமரம் அருகே வைக்கப்பட்டிருந்த உண்டியல் திறந்து கிடந்தது. அதிர்ச்சியடைந்த பணியாளர்கள் அருகில் சென்று பார்த்த போது பூட்டு உடைக்கப்பட்டு உண்டியலில் இருந்த பணம் திருடப்பட்டது தெரிய வந்தது. உடனடியாக அவர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

இதற்கிடையில் அருகில் உள்ள தாதம்பட்டி கிராமத்தில் மேட்டுப் பெருமாள் நகரில் அமைந்துள்ள நீலமேக பெருமாள் கோவிலில் வைக்கப்பட்டிருந்த 2 அடி உயர உண்டியலில் பூட்டு உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டதாக தகவல் வந்தது.

2 கோவில்களிலும் இருந்த உண்டியல்களில் இருந்து எவ்வளவு பணம்? திருடப்பட்டது என்பது குறித்த தகவல்கள் இல்லை.

ஒரே நாள் நள்ளிரவில் மர்ம நபர்கள் அடுத்தடுத்து கோவில்களின் உண்டியலை உடைத்து பணத்தை எடுத்து சென்றார்களா? என போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்த கொள்ளை சம்ப வங்கள் குறித்து வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து, சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 2 கோவில்களிலும் கண்காணிப்பு காமிரா பொருத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கொள்ளையர்கள் இதனை நோட்டமிட்டு திட்டமிட்டு 2 கோவில்களிலும் கொள்ளையடித்து சென்றார்களா? அல்லது இந்த சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் வெவ்வேறு கும்பலா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரே நாள் இரவில் அருகருகே உள்ள 2 கிராமங்களின் பழமையான கோவில்களில் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டு அதிலிருந்த பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News