உள்ளூர் செய்திகள்

அம்மன் கோவிலில் தங்கம்-வெள்ளி நகைகள் கொள்ளை

Published On 2022-10-03 08:11 GMT   |   Update On 2022-10-03 08:11 GMT
  • திருமங்கலம் அருகே அம்மன் கோவிலில் தங்கம்-வெள்ளி நகைகள் திருட்டு போனது.
  • இந்த சம்பவம் தொடர்பாக டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.

திருமங்கலம்

திருமங்கலம் அருகே உள்ள டி.கல்லுப்பட்டி கிராமத்தில் ஆயிரம் கண்ணுடையாள் அம்மன் கோவில் இருக்கிறது. இந்த கோவிலில் 41 அடி உயர பிரம்மாண்ட அம்மன் சிலை உள்ளது. மேலும் வாராகி அம்மன் உள்ளிட்ட பல்வேறு சாமி சிலைகள் இருக்கின்றன.

பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வர். நேற்று முன்தினம் இரவு பூஜைகள் முடிந்ததும் கோவில் நடை பூட்டப்பட்டது. நேற்று காலை கோவிலை திறக்க பூசாரி வந்த போது கோவில் நடை திறந்து கிடந்தது.

மேலும் அம்மனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த தங்க தாலி உள்ளிட்ட தங்க நகைகள் மற்றும் வெள்ளி கிரிடம் உள்ளிட்ட வெள்ளி பொருட்கள் திருட்டு போயிருந்தன. இது குறித்து கோவில் நிர்வாகி செந்தில்குமார் திருமங்கலம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அம்மனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த 11 பவுன் தங்க நகைகள், ரூ.1 லட்சம் மதிப்புள்ள வெள்ளி கிரிடம் மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தன.

யாரோ மர்ம நபர்கள் இரவு நேரத்தில் கோவிலுக்குள் புகுந்து நகைகளை கொள்ளையடித்து சென்றிரு ப்பது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. கொள்ளையில் ஈடுபட்டவர்கள் யார்? என்பதை கண்டறிய கோவிலில் இருந்த கண்காணிப்பு காமிராக்களில் பதிவாகி இருந்த வீடியோ பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அப்போது நள்ளிரவு நேரத்தில் 2 மர்ம நபர்கள் கம்பி வேலியை வெட்டி அதன் வழியாக கோவிலுக்குள் புகுந்து நகைகளை திருடி சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தன.

அதன் அடிப்படையில் கோவில் நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்கள் இருவரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். பிரசித்தி பெற்ற அம்மன் கோவிலில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் டி.கல்லுப்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News