சோழவந்தான்-சிவரக்கோட்டை இடையே புதிய சரக்கு ெரயில் பாதை
- மலையை குடைந்து சோழவந்தான்- சிவரக்கோட்டை இடையேயான தண்டவாளம் போட முடிவு செய்யப்பட்டுள்ளது.
- இது தொடர்பான அறிக்கை ஒப்புதலுக்காக, தென்னக ெரயில்வே தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
மதுரை
சோழவந்தான்-சிவரக் கோட்டை இடையே ரூ.512 கோடி செலவில் 32 கி.மீ. தொலைவிற்கு புதிய பை-பாஸ் வழித்தடம் அமைய உள்ளது. இதன் ஒரு பகுதியாக சோழவந்தான் அருகே பன்னியான் மலையை 1.5 கி.மீ. தொலைவுக்கு குடைந்து புதிய சரக்கு ெரயில் பாதை அமைக்கப்படுகிறது.
மதுரை ெரயில் நிலையத்தில் அதிகாலை 1.30 மணி முதல் 5 மணி வரையும், 8 மணி முதல் 10 மணி வரையும், இரவு 7.30 மணி முதல் 12.45 மணி வரையும் 4 வழித்தடங்கள் மிகவும் பரபரப்பாக இருக்கும்.
எனவே சரக்கு ெரயில்கள் திருமங்கலம், சோழவந்தானில் காத்திருக்க வேண்டி உள்ளது. பைபாஸ் வழித்தடம் அமைந்தால் சோழவந்தான், பன்னியான், சாத்தங்குடி, மேலக்கால், கண்ணூர், மேலேந்தல் வழியாக சிவரக்கோட்டைக்கு சென்று விடலாம். அதுவும் தவிர பைபாஸ் வழியாக செல்வதால் 13.76 கி.மீ. தொலைவு பயண நேரம் குறையும்.
சோழவந்தான்-சிவரக்கோட்டை இடையே புதிய சரக்கு ெரயில் வழித்தடம் அமைய உள்ள பகுதியில் பெரிய அளவில் விவசாய நிலம், கட்டிடங்கள் இல்லை. எனவே நிலத்தை ஆர்ஜிதம் செய்வது சுலபம். அதுவும் தவிர 4 இடங்களில் தேசிய நெடுஞ்சாலை வருகிறது.
இதன் மூலம் கன்னியா குமரி நான்கு வழிச்சாலை, தோப்பூர் எய்ம்ஸ், பெருங்குடி ஏர்போர்ட் ஆகியவற்றை மதுரையுடன் இணைக்க முடியும். சரக்கு ெரயில்களுக்கும் தனி பாதை கிடைக்கும். இதே வழித்தடத்தில் சரக்கு ெரயில்கள் மட்டுமின்றி வந்தே பாரத் ெரயில்களையும் இயக்க முடியும்.
சோழவந்தான்- சிவரக்கோட்டை இடையேயான பைபாஸ் சரக்கு பாதை ெரயில் வழித்தடம் தொடர்பான உத்தேச அறிக்கை ஒப்புதலுக்காக, தென்னக ெரயில்வே தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. மத்திய ெரயில்வே வாரியத்தின் ஒப்புதல் கிடைத்த உடன் சோழ வந்தான்- சிவரக்கோட்டை இடையேயான பைபாஸ் வழித்தடத்துக்கான நில ஆர்ஜிதம் செய்யும் பணிகள் தொடங்கும் என்று மதுரை கோட்ட ெரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.