தண்ணீர் குடிப்பது போல் நடித்து பெட்ரோல் பங்க்கில் பணம்
- தண்ணீர் குடிப்பது போல் நடித்து பெட்ரோல் பங்க்கில் பணம் திருடிய வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
- மதுரை-தூத்துக்குடி 4 வழிச்சாலையில் எலியாருபத்தி டோல்கேட் அருகே உள்ள பெட்ரோல் பங்க்கில் மினிவேனில் டீசல் நிரப்ப வந்தனர்.
திருமங்கலம்
மதுரை-தூத்துக்குடி 4 வழிச்சாலையில் எலியாருஅ பத்தி டோல்கேட் அருகே உள்ள பெட்ரோல் பங்க்கில் நேற்று முன்தினம் மினிவேனில் டீசல் நிரப்ப வந்த 2 வாலிபர்கள், தண்ணீர் குடிப்பது போல் நடித்து பெட்ரோல் பங்க் அலுவலக மேஜேயில் இருந்த ரூ.40 ஆயிரத்து 400 பணத்தை திருடி சென்று விட்டனர்.
பெட்ரோல் பங்க்கில் இருந்த சி.சி.டி.வி. காமிராவில் வாலிபர்கள் பணம் திருடிவிட்டு, தாங்கள் வந்த வாகனத்தில் அங்கிருந்து தப்பி செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன. இது குறித்து கூடக்கோவில் போலீஸ் நிலையத்தில் பெட்ரோல் பங்க் ஊழியர் ராஜேஷ் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.
திருட்டில் ஈடுபட்டவர்களை பிடிக்க திருமங்கலம் துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தகுமார் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் திருட்டில் ஈடுபட்ட நபர்கள் யார்? என்று அடையாளம் காணும் முயற்சியில் தனிப்படை போலீசார் ஈடுபட்டனர்.
அதில் அவர்கள் மதுரை சாமநத்தத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவரின் மகன் கார்த்திக்(வயது29), சோழவந்தான் அருகே உள்ள காடுபட்டியை சேர்ந்த பாண்டி என்பவரின் மகன் காமாட்சி(30) என்பது தெரியவந்தது.
அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் மினிவேனில் பழ வியாபாரம் செய்து வந்துள்ளார். மற்றொருவரான காமாட்சி அந்த வேனில் டிரைவராக இருந்துள்ளார். இருவரும் சம்பவத்தன்று வியாபாரம் செய்வதற்கு சென்றபோது பெட்ரோல் பங்க்கில் இருந்த ஊழியர் ராஜேஷ் கவனிக்காத நேரத்தில் பணத்தை திருடியது தெரியவந்தது.