உள்ளூர் செய்திகள்

கந்த சஷ்டி விழா நிறைவு நாளான இன்று திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தேரோட்டம் நடந்தது. தேரில் வள்ளி, தெய்வானை எழுந்தருளினர். காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.

கந்த சஷ்டி விழா தேரோட்டம்

Published On 2022-10-31 09:32 GMT   |   Update On 2022-10-31 09:32 GMT
  • திருப்பரங்குன்றத்தில் இன்று கந்த சஷ்டி விழா தேரோட்டம் நடந்தது.
  • பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 25-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று மாலை சூரசம்காரம் நடைபெற்றது.

முன்னதாக உற்சவர் சுப்பிரமணிய சுவாமிக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16 வகை சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி ரத வீதிகள் வழியாக வந்தார்.

சன்னதி தெருவில் உள்ள சொக்கநாதர் கோவில் முன்பு வீரபாகு தேவருடன் எழுந்தருளினார். அங்கு சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார லீலை ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் நடைபெற்றது. தொடர்ந்து முருகப்பெ ருமான்-தெய்வானை மாலை மாற்றும் வைபவம் நடைபெற்றது.

தேரோட்டம்

விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியாக இன்று காலையில் முருகப்பெருமான், தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளினார். கோவில் வாசல் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த சிறிய சட்டத் தேரில் எழுந்தருளினர்.

தேரை காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தேர் கிரிவல பாதையில் வலம் வந்தது. தொடர்ந்து இன்று மாலையில் பாவாடை தரிசனமும், மூலவர் முருகப்பெருமானுக்கு தங்க கவச அலங்கார சிறப்பு வழிபாடு நடக்கிறது.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் துணை ஆணையர் சுரேஷ் தலைமையில் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News